கோட்டாபயவின் திட்டம் தோற்றுப்போன பரிதாபம்! பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்ட முதல் ஜனாதிபதி - திருத்தி எழுதப்பட்ட வரலாறு
இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையான ஒவ்வொரு ஒன்பதாம் திகதிகளும் இலங்கை அரசியல் பரப்பில் பாரிய புரட்சிகளை ஏற்படுத்திய நாட்களாக அமைந்துள்ளன.
முழு உலகும் இலங்கையை திரும்பி பார்க்கும் அளவிற்கு, சர்வதேச ஊடகங்கள் எல்லாம் இலங்கையை தலைப்புச் செய்திகளாக கொண்டு வரும் அளவுக்கு இந்த ஒன்பதாம் திகதி புரட்சிகள் சாதனை படைத்துள்ளன.
வாட்டி வதைத்த வறுமை
இலங்கையை ஆட்டிப் படைத்த கோவிட் தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது கடந்த வருட ஆரம்பத்தில் தீவிரமடைய ஆரம்பித்ததன் விளைவாக ஏற்பட்ட இந்த ஒன்பதாம் திகதி புரட்சிகள், தேர்தல் இன்றி, பிரச்சாரம் இன்றி, பொதுக்கூட்டங்கள் இன்றி, கோடிக்கணக்கில் செலவுகளின்றி ஒரு அரசாங்கத்தையே மாற்றி அமைத்தன.
பொருளாதார நெருக்கடிகள் உச்சம் தொட ஆரம்பித்த நிலையில், பொதுமக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர், எரிவாயு இல்லை, எரிபொருள் இல்லை, உணவுப் பொருட்கள் இல்லை, ஆனால் வறுமை மாத்திரம் நாட்டில் கோரத் தாண்டவம் ஆடியது. விலை அதிகரிப்பு, பற்றாக்குறை, வருமானமின்மை, வரிசை யுகம், வரிசை மரணங்கள் இப்படி வறுமை இலங்கை மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.
சாதாரண குடிமகன் முதற்கொண்டு வசதிபடைத்த செல்வந்தர்கள் வரை இதற்கு முகம் கொடுக்க நேரிட்டதுடன் புரட்சிகளுக்கு இவையே வித்திட்டன.
தீவிரமடைந்த போராட்டம்
இப்படித்தான், கடந்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி(31.03.2022) அன்று பாரிய போராட்டத்தின் பிள்ளையார் சுழி, மிரிஹானவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு முன்னால் இடப்பட்டது.
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டு வளாகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் நள்ளிரவு தாண்டியும் ஓயாது குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
களத்தில், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் ஆகியோர் பெருமளவில் குவிக்கப்பட்டதோடு, கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தும் வாகனமும், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனமும் தயார் நிலையில் இருத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கு அஞ்சாத ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் போராட்டடத்தை நடத்தி வந்தனர்.இந்த தொடர் போராட்டத்தின் விளைவாக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி(09.07.2022) காலி முகத்திடலில் கோட்டா கோ கம போராட்டக் குழு உதயமானது.
காலி முகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்ட கோட்டா கோ கம போராட்டக்காரர்கள், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் நிறுத்தப்படப் போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தனர்.
பதவி விலகிய மகிந்த
அடுத்து வந்த சில நாட்களில் கோட்டா கோ கமவிற்கான ஆதரவு பெருகியது. கோட்டா கோ கம விரிவாக்கம் அடைந்தது. கூடாரங்கள் அதிகரித்தன. எதிர்ப்புக்கள் வலுத்தன. கைதுகள் தொடர்ந்தன. அரசாங்கத்திற்கு தலையிடி அதிகரித்தது. பொதுமக்கள் ஒன்று திரண்டனர். கோட்டா கோ கமவிற்கு கிளைகள் உருவாகின. நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பணிகளை புறக்கணித்தனர். போராட்டக் களத்தில் குதித்தனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போராட்டங்களும் வலுப்பெற்றன. பொது போக்குவரத்து முற்றாக முடங்கியது. சர்வதேசமும் இலங்கையை அவதானித்து கொண்டிருந்தது. சர்வதேச நாடுகள் தங்களது நாட்டு பிரஜைகளுக்கு இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். பசி பட்டினியும் நாட்டில் கோரத் தாண்டவம் ஆடியது.
கோட்டா கோ கம போராட்டக்களம் விரிவடைந்து போராட்டங்கள் வலுப்பெற்று ஒரு மாதம் கடந்த நிலையில் மே மாதம் 9ஆம் திகதி(09.05.2022) அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் கூட்டம் ஒன்றை கூட்டுகின்றார். அரசியல்வாதிகளும், மகிந்தவின் ஆதரவாளர்களும் அங்கு திரண்டிருந்தனர். கூட்டம் நடத்தப்பட்டு சில மணி நேரங்களியே கூட்டத்தில் கலந்து கொண்ட மகிந்தவின் ஆதரவாளர்கள் என சொல்லிக் கொண்டவர்கள் பொல்லுகளுடனும், தடிகளுடனும் கோட்டா கோ கமவை நோக்கி படையெடுத்தனர்.
கோட்டா கோ கமவில் போராட்டக் காரர்களுக்கும் மகிந்தவின் ஆதரவாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் வலுப்பெற்றன. அதன் விளைவாக அன்று பிற்பகலே தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்து விட்டார். புதிய பிரதமராக ரணில் பதவியேற்றார்.
அதனைத் தொடர்ந்தும் மோதல்களும், போராட்டங்களும் தொடர்ந்த வண்ணமே இருந்தன. அதனையடுத்து பல அமைச்சர்கள் பதவி விலகுவதும் புது அமைச்சர்கள் பதவியேற்பதும் சர்வ சாதாரணமாக நடைபெற்றது. காலையில் புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டு மாலையில் அவர் பதவி விலகுவதும் இலங்கை அரசியல் பந்தாடப்பட்டுக் கொண்டிருந்தது.
அதன் பின்னர் கடந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் திகதி(09.06.2023) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பசில் ராஜபக்ச விலகினார்.
புரட்சிகள் வெடித்த ஜூலை ஒன்பது
அப்போதும் போராட்டங்கள் வலுப்பெற்றன. அரசாங்கத்திற்கு எதிரான மக்களது மன நிலையும் எதிராகவே இருந்தது. கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் வரை எங்களது போராட்டம் முடிவுறாது என்பதில் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் உறுதியாகவே இருந்தனர்.
அந்த உறுதி இன்னும் ஒருமாதம் நீடித்து ஜூலை 9ஆம் திகதியை(09.07.2023) கோட்டா கோ கம போராட்டக்களம் அடைந்தது. அன்றையதினம் தான் இலங்கையில் மிகப் பெரிய புரட்சி வெடித்த நாளாக சர்வதேசத்திலும் அடையாளப்படுத்தப்பட்டது.
இலங்கை வரலாற்றில் ஒரு ஜனாதிபதியை மக்கள் தங்களது போராட்டங்களால் விரட்டியடித்த முதல் தடவையாக அன்றையதினம் பதிவானது.
போக்குவரத்துக்கள் முற்றிலும் ஸ்தம்பிதமடைந்திருந்தாலும் ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் தலைநகரை நோக்கி படையெடுத்தனர்.
தொடருந்துகள், பேருந்துகள் மற்றும் லொறிகள் ஊடாக கோட்டா கோ கமவை நோக்கி மக்கள் படையெடுத்து வந்தனர். காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிந்தது. “கோட்டா கோ” என்ற கோஷம் விண்ணதிர ஒலித்தது.
இராணுவத்தினராலோ, பொலிஸாராலோ கட்டுப்படுத்த முடியாது வகையில் போராட்டக்காரர்களது எண்ணிக்கை அதிகரித்ததோடு போராட்டத்தின் வேகம் தீவிரமடைந்தது. போராட்டம் ஆரம்பித்த மதியத்திற்குள்ளாகவே ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அன்று காலை வரை ஜனாதிபதி மாளிகையில் கோட்டாபய ராஜபக்ச இருந்த போதிலும் அதன் பின்னரான சூழ்நிலைகள் காரணமாக அவர் வெளியேறியதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகமும் முற்றுகையிடப்பட்டு போராட்டக்காரர்கள் உள்நுழைந்தனர்.
இந்தநிலையில் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டமாக பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தமது உச்சக்கட்ட எதிர்ப்பினை வெளிப்படுத்தும் அளவிற்கு எதிர்ப்பினை சம்பாதித்த, வரலாற்றில் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச திகழ்கின்றார்.
அன்றைய போராட்டத்தன் எதிரொலியாக தான் ஜூலை மாதம் 13ஆம் திகதி பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்தார். அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றது. எனவே தானும் பதவி விலகுவதாகவும், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் அன்றே ரணில் விக்ரமசிங்க அறிவித்தததுடன், சபாநாயகர் தலைமையில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
தான் தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலக விரும்பவில்லை என கடந்த காலங்களில் தெரிவித்திருந்த கோட்டாபய ராஜபக்ச திடீரென பதவி விலகுவதாக அறிவித்தமை பெரும் திருப்புமுனையாகவே அமைந்தது.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்தது போராட்டக்காரர்களுக்கு கிடைத்த வெற்றியாக மட்டும் பார்க்காமல் முழு இலங்கையும் பாட்டாசுக் கொழுத்தி கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் அடுத்த இரண்டு நாட்களுக்குள் நாட்டில் இருந்து மாலைதீவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அங்கிருந்து சிங்கப்பூர் சென்றிருந்தார். நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே தாம் பதவி விலகுவதற்கான கடிதத்தை கோட்டாபய ராஜபக்ச அனுப்பி வைத்திருந்தார். கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் சென்ற கையோடு பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க அடுத்து வந்த சில நாட்களில் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் நாட்டில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருந்த சமயத்தில் ஒரு மீட்பரைப் போல தன்னைக் காட்டிக் கொண்டு அந்த வருடத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் பெரும்பான்மை வாக்குகளால் அரியணை ஏறிய கோட்டாபய ராஜபக்சவின் அரியணை ஆயுள் மிகக் குறுகியதாகவே காணப்பட்டது.
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் அவர் எடுத்த முடிவுகளும், அவரின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்களின் ஆலோசனையுமே அவரது வீழ்ச்சிக்கு வித்திட்டதாக பலரும் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர்.
பெரும்பான்மை வாக்குகளால் தன்னை ஜனாதிபதியாக கொண்டு வந்த தனது மக்களாலேயே இறுதியில் கோட்டாபய விரட்டியடிக்கப்பட்டமை வரலாற்றில் மக்கள் போராட்டம் பெரும் வெற்றிக்கண்ட ஒரு நாளாக பதிவாகியுள்ளது.
இறுதியில் மக்களின் போராட்டங்களால் ஒரு அரசாங்கமே முழுதும் மாற்றியமைக்கப்பட்ட வரலாறும் உருவானது.. வரலாறு திருத்தி எழுதப்பட்டது..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |