முதலீட்டு வலயங்களூடாக வடக்கில் 16,000 பேருக்கு தொழில் வாய்ப்பு
அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில்வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (04.04.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
மூன்று தசாப்தகால போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு தற்போது அதிகளவு முதலீட்டாளர்கள் வருகைதருகின்றனர். அவர்களுக்கான ஒழுங்குகளைச் செய்துகொடுக்கின்றோம்.
வேலைவாய்ப்பு பிரச்சினை
அரசாங்கமும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. இந்தக் காலத்திலேயே முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.
எமது இளையோருக்கு வேலைவாய்ப்பு பிரச்சினையாகவுள்ளது. தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பன எமது அபிவிருத்திக்கு தடையாகவுள்ளன, என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் முதலீட்டுச் சபையின் தலைவர் தனது உரையில், இவ்வாறான கலந்துரையாடலை ஒழுங்குபடுத்தியமைக்காக ஆளுநருக்கு நன்றிகளைக் கூறுகின்றோம்.
முதலீடுகளை ஊக்குவிக்கும் அவரது முயற்சியை வரவேற்கின்றோம். எவ்வளவு விரைவாக வடக்கின் மூன்று முதலீட்டு வலயங்களுக்குமான பணிகளை ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதனைச் செய்வதற்கே விரும்புகின்றோம்.
முதலீட்டு வலயங்கள்
அடையாளப்படுத்தப்பட்ட மூன்று முதலீட்டு வலயங்களையும் நாங்கள் பார்வையிட்டுள்ளோம், என்றார். காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய முதலீட்டு வலயத்துக்கான போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் தொடர்பாக தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன.
இதனை முன்னெடுப்பதிலுள்ள உடனடிச் சவால்கள் இனங்காணப்பட்டு அவற்றுக்கு தீர்வுகளும் கண்டறியப்பட்டன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய காலத்தில் அதற்கான புகையிரதப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அவற்றை புனரமைத்து மீளமைப்பதுடன் அதனை காங்கேசன்துறை துறைமுகம் வரையில் விரிவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

