மாகாண சபைத் தேர்தல்: சட்டத்திருத்தத்திற்கான தனிநபர் பிரேரணை குறித்து சாணக்கியன் உறுதி
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சட்டத் திருத்தம் மேற்கொள்வதற்கான தனிநபர் பிரேரணை அடுத்த வாரமளவில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தலுக்கான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் நேற்று யாழில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் உரையாற்றும் போது அவர், "மாகாணசபைத் தேர்தல் நடக்குமா என இப்பொழுது தெரியாது. ஜனாதிபதியை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்த பொழுது உள்ளுராட்சி சபைத் தேர்தலை இப்பொழுது நடத்துவோம் மாகாணசபைத் தேர்தலை பிறகு நடத்துவோம் எனக் கூறினார். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்பட வேண்டும்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
குறித்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கடந்த நாடாளுமன்றத்தில் ஒரு தனிநபர் பிரேரணை கொண்டுவந்ததுடன் குறித்த தனிநபர் பிரேரணை மூன்றாம் வாசிப்புக்கும் திகதி குறிப்பிடப்பட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அது அகற்றப்பட்டது.
அந்த திருத்தத்தை மேற்கொண்டால் மாத்திரமே தேர்தலை நடத்த முடியும். இவ்விடயத்தை சுட்டிக்காட்டி குறித்த தனிநபர் பிரேரணையை நான் கொண்டுவரவா என நான் ஜனாதிபதியிடம் வினவினேன். எனினும் அவர் அதனை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் எனக் கூறி மறுத்துவிட்டார். அவர் குறித்த வாக்குறுதியை வழங்கி மூன்று மாதம் கடந்துவிட்டது.
ஆனாலும் குறித்த பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஓர் கூட்டத்தில் நான் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் மீண்டும் அதே விவகாரத்தைக் கேட்டிருந்தேன்,
அவரும் 'அரசாங்கம் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும்' எனத் தெரிவித்திருந்தார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பாக, மாகாணசபை தேர்தலை இவ்வருடம் நடத்த மாட்டோம் என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.
எனவே மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை இவர்கள் இல்லாமல் செய்துவிட்டார்களா எனும் சந்தேகம் எழுகின்றது. எவ்வாறாயினும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் ஆலோசனைப்படி குறித்த தனிநபர் பிரேரணையை அடுத்த வாரமளவில் கொண்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளேன். அதற்கு பிறகு அரசாங்கத்துக்கு சொல்வதற்கு எவ்வித நொண்டி சாக்கும் இருக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
