சீன சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மதபோதகர் ஜின் மிங்ரி அமெரிக்கா சென்றடைவு
சீனாவின் தென் பகுதியில் உள்ள பெய்ஹாய் தடுப்புக்காவல் மையத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அடைக்கப்பட்டிருந்த பெய்ஜிங் சீயோன் தேவாலயத்தின் தலைமை மதபோதகர் ஜின் மிங்ரி அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டு, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சென்றடைந்துள்ளார்.
சீனாவில் அரசாங்கத்தின் அனுமதியின்றி இயங்கி வரும் மிகப்பெரிய நிலத்தடி வீட்டு தேவாலயங்களில் ஒன்றான சீயோன் தேவாலயத்தைச் சேர்ந்த போதகர் ஜின் மிங்ரி உட்பட 18 முக்கிய தலைவர்கள் கடந்த ஆண்டு சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீன அதிகாரிகளால் விடுவிப்பு
அவர்கள் மீது தகவல் தொடர்பு வலையமைப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
போதகர் ஜின் மிங்ரி தற்போது விடுவிக்கப்பட்ட போதிலும், தேவாலயத்தைச் சேர்ந்த மேலும் 8 உறுப்பினர்கள் இன்னும் சீனாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் கிரேஸ் ஜின் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மே மாதம் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் போதகர் ஜின்னின் விடுதலை குறித்து நேரடியாக வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதலை மிகவும் விரைவாக நடந்துள்ளதாகவும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் நேரடி தலையீடு இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது என்றும் போதகரிடம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு சீனாவில் உள்ள விசுவாசிகளுக்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவிற்கும் ஒரு சாதகமான திருப்பமாக அமையும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அவரது விடுதலையை கிறிஸ்தவ மனித உரிமை அமைப்பான சீனாஎய்ட் ஆழ்ந்த நன்றியுடன் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.