வெளியாகியுள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ஆவணக்கோப்புகள்: அமெரிக்க அரசியலில் பரபரப்பு நிலை
அமெரிக்காவில் பாலியல் குற்றவாளி என்று கூறப்பட்டு தண்டனையளிக்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட கோப்புகளில் ஒரு சிறிய பகுதியை மட்டும் அமெரிக்க நீதித்துறை நேற்றையதினம்(19)வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
எனினும் வெளியிடப்பட்ட ஆவணங்கள் பெரும்பாலும் கடுமையாக மறைக்கப்பட்டுள்ளதால், அரசு வெளிப்படைத்தன்மை குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வெளியான புகைப்படங்கள்
நீதித்துறை வெளியிட்டுள்ள இந்த ஆவணங்கள், எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 300 ஜிபி தரவுகளில் 1வீதம் மட்டுமே என சட்டமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். வெளியிடப்பட்ட 3,900-க்கும் மேற்பட்ட கோப்புகளில் பல பக்கங்கள் முழுவதுமாக கறுப்பு பெட்டிகளால் மறைக்கப்பட்டுள்ளன.
நீதித்துறை தரப்பில், இந்த மறைப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டவை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்;, இது “New Civil Rights Act” சட்டத்தின் நோக்கத்திற்கு முரணானது என குற்றம் சாட்டியுள்ளனர்.
வெளியிடப்பட்ட ஆவணங்களில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், இசைக் கலைஞர் மிக் ஜாகர், பாடகர் மைக்கேல ஜெக்சன், தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன், முன்னாள் பிரித்தானிய அமைச்சர் பீட்டர் மான்டெல்சன், மற்றும் கிஸ்லேன் மேக்ஸ்வெல் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
எப்ஸ்டீன் வழக்கு
எனினும், ஆவணங்களில் பெயர் அல்லது படம் இடம்பெற்றிருப்பது, தவறான செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் அல்ல என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய சொத்தில் இருந்ததாக கூறப்படும், பில் கிளிண்டன் நீல உடையும் சிவப்பு ஹீல்ஸம் அணிந்தபடி வரையப்பட்ட ஓவியம் மீண்டும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த ஓவியத்தை வரைந்த கலைஞர் பெட்ரினா ரையன்-க்லைட், இது மாணவியாக இருந்தபோது உருவாக்கிய கலைப்பணி என்றும், அரசியல் செய்திகளை காட்சிப்படுத்தும் முயற்சி மட்டுமே என்றும் முன்னதாக விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து வெளியிடப்பட்ட ஆவணங்களில் மிகக் குறைந்த அளவிலேயே குறிப்புகள் உள்ளன. அதேநேரம் ட்ரம்ப்பும், எப்ஸ்டீனுடன் தொடர்புடைய எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை என தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்தநிலையில் எப்ஸ்டீன் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், நீதித்துறையின் வெளியீடு முழுமையற்றதாக இருப்பதாக கூறி ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப்-எப்ஸ்டீன் தொடர்பு
அதேநேரம் சில சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமா அதிபரை பதவி நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நீதித்துறை மேலும் ஆவணங்களை வெளியிடும் என கூறப்பட்டுள்ள நிலையில், முழுமையான தகவல்கள் வெளிவருமா என்ற கேள்வி தொடர்ந்து நிலவுகிறது.

முன்னதாக 2008இல் புளோரிடாவில் உள்ள எப்ஸ்டீனின் இல்லத்தில் 14 வயது சிறுமி தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்டதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறையிட்டனர் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது எப்ஸ்டீனின் வீட்டில் சிறுமிகளின் ஏராளமான புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் பாலியல் குற்றங்களுக்காகக் எப்ஸ்டீனுக்கு 17 ஆண்டுக்கு முன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும் அவர் 6 ஆண்டுக்கு முன் சிறையில் தவறான முடிவெடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.