குறைபாடுகளை மாற்றுத் தரப்பிடம் கேட்டுத் தீர்ப்பதே சிறந்த அரசாங்கம்: ஜீவன் குற்றச்சாட்டு
நாங்கள் செய்வது மட்டும் தான் சரி என்று நினைப்பது ஒரு நல்ல அரசின் அடையாளம் அல்ல. மாறாக, ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாற்றுத் தரப்பினரிடம் கேட்டறிந்து, அதற்குரிய சரியான தீர்வுகளைக் காண்பதே ஒரு சிறந்த அரசின் உண்மையான பண்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09.06.2026) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய மக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கடந்த டிட்வா புயல் பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் தொடர்பாக, கொத்மலை - வேவன்டன் தோட்டப் பகுதியை மையப்படுத்தி நாடாளுமன்றில் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.

எனினும், இந்தப் புயல் பாதிப்பு நிலவரங்கள் மற்றும் அங்குள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக எமது தரப்பால் ஜனாதிபதி செயலகத்துக்கும் உரிய அமைச்சுக்களுக்கும் எழுத்துபூர்வமாகப் பல கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், இதுவரை அவற்றுக்கு அரசிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கப் பெறவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை பிரச்சினை
பெருந்தோட்ட மக்களின் காணியுரிமைப் பிரச்சினைக்கு அரசு உடனடித் தீர்வு காண வேண்டும். அத்துடன், பெருந்தோட்ட மக்களின் காணியுரிமை தொடர்பாகப் பேசப்பட வேண்டியது தற்போதைய சூழலில் மிகக் கட்டாயமான ஒன்றாக மாறியுள்ளது.
மலையக மக்களுக்கான காணியுரிமையை முறையாக வழங்குவதற்கென ஏற்கனவே கடந்த அரச காலங்களில் அமைச்சரவை அனுமதிப் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசு அந்த அமைச்சரவை ஆவணங்களை வெறுமனே கிடப்பில் போட்டு வைத்திருக்காமல், உடனடியாக நடைமுறைப்படுத்தினாலே அது இந்த மக்களுக்குப் பெருமளவில் பயனுள்ளதாக அமையும்.
எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கடந்து மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசு உரிய முறையில் தீர்வு காண முன்வர வேண்டும் என்றார்.
வைத்தியசாலையில் அலட்சியத்தால் தாயும் சிசுவும் மரணம் - வைத்தியர்கள் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு