சம உரிமைகளே நிலையான சுதந்திரம்: ஜீவன் தொண்டமானின் வாழ்த்து செய்தி
இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை அனுபவிக்க கூடிய சூழ்நிலை மலரும் பட்சத்திலேயே நிலையான சுதந்திரம் பிறக்கும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரின் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பல்லின சமூகங்களும் வாழும் இலங்கை திருநாடு சுதந்திரம் அடைந்து இன்றோடு 76 ஆண்டுகளாகின்றன.
சுதந்திர உணர்வு
இந்த உன்னதமான நாளை இலங்கையர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது நாட்டுக்கே உரித்தான பாரம்பரிய நடைமுறைகளுடன் கொண்டாடுவோம்.
சுதந்திரம் என்பது தனக்கு மட்டும் அல்ல தன்னை சூழ உள்ளவர்களுக்கும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு செயற்படுவோம்.
நாடு சுதந்திரம் அடைந்தாலும் எமது மலையக பெருந்தோட்ட மக்கள் அரசியல், பொருளாதாரம், சமூக ரீதியிலான பிரச்சினைகளில் இருந்து இன்னும் விடுதலையாகவில்லை.
எனவேதான் எமது மக்களையும் தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்காக எல்லா விதமான நடவடிக்கைகளையும், நகர்வுகளையும் முன்னெடுத்துவருகின்றோம்.
இன நல்லிணக்கம்
லயன் யுகத்தில் இருந்து விடுபட வேண்டுமெனில் காணி
உரிமை அவசியம், அதனை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பல்லின சமூகமும் வாழும் இலங்கையில் இன நல்லிணக்கம், ஐக்கியம் என்பது மிக முக்கியம். இலங்கையில் நீடித்த அமைதி, நிலையான அபிவிருத்தி என்பன இன நல்லிணக்கத்திலேயே தங்கியுள்ளன.
எனவே, இன நல்லிணக்கத்துக்காகவும் நாம் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும்” என உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |