மலையக மக்களின் உரிமைகள் குறித்து ஜனாதிபதியுடன் சந்திப்பு : ஜீவன் தொண்டமான்
நாடாளுமன்றத்துக்குள் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி உருவாக்கப்பட்ட ஒன்றியத்தின் சார்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து மலையக மக்களின் காணி உரிமை, வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் மாகாண சபை தேர்தல் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(03.07.2026) கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஜனாதிபதியுடனான பேச்சின் பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இயற்கை அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ள நிலையில், மலையகத்தில் காணி மற்றும் வீடமைப்பு பிரச்சுனை இன்னமும் இழுபறியாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி
இது அரசின் மீதான விமர்சனம் அல்ல என்றும், மாறாக நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு முறைமைச் சார்ந்த பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை முறைமை காரணமாக காணிகளை விடுவிப்பதில் பெரும் சிக்கல்கள் நிலவுவதுடன், காணிகளை விடுவித்தாலும் தோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வீடமைப்பு முன்னுரிமை அளிக்கப்படும் என நிறுவனங்கள் நிபந்தனை விதிக்கின்றன எனத் தெரிவித்த அவர், இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், மலையக வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபா நிதி போதுமானது அல்ல என்பதால், எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த முறை ஒதுக்கப்பட்ட 7 பில்லியன் நிதியில் 67 வீதம் இந்திய அரசிடன் நிதியுதவி என்பதால், இலங்கை அரசின் நேரடி நிதி ஒதுக்கீடு மலையகப் பகுதிகளுக்கு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காணி உரிமை கட்டாயம் வழங்க
காணி வழங்குவது சுலபமான காரியம் அல்ல என்றும், வளங்கள் மற்றும் மலையக சுற்றாடல் பாதுகாப்பு குறித்த சவால்கள் இருக்கின்றன என ஜனாதிபதி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அக்கருத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும், மலையக மக்களுக்கு உறுதியான காணி உரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருக்கின்றார் எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

மேலும், மாகாண சபை என்பது தமிழர்களுக்கு மட்டுமேயான ஒரு விடயம் அல்ல என்றும், அது இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் அவசியமான அதிகார பரவலாக்கத்தின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
13 மாவட்டங்களில் சிறுபான்மையாக (10 வீதம் முதல் 15 வீதம் வரை) வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு, தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் கீழேயே பிரதிநிதித்துவத்தைப் பெற முடிகிறது எனக் கூறிய அவர், தேர்தல் முறைமை மாற்றப்பட்டால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கும் அபாயம் உள்ளதால், புதிய அரசமைப்பு வரும் வரை பழைய தேர்தல் முறைமையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததார்கள் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு மற்றும் வரவேற்பு மிகவும் சுமுகமாக அமைந்த போதிலும், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான நடைமுறை முடிவுகளை இனிவரும் காலங்களிலேயே பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற ஜீவன் தொண்டமான் தனது பேட்டியில் நிறைவாகத் தெரிவித்தார்.