இலங்கை தொடர்பில் ஜப்பான் வலுவான ஒத்துழைப்பை வழங்க கோரிக்கை!
இலங்கையின் பிணையெடுப்புக்காக ஜப்பான் வலுவான ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஜப்பான் நியூஸ் தமது ஆசிரியர் தலையங்கத்தில் கோரியுள்ளது.
இலங்கையை ஆதரிப்பதற்காகத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், மிகப்பெரிய கடன் வழங்கும் நாடாக, பிணை எடுப்பில் தீவிரமாக ஈடுபட வேண்டிய பொறுப்பு சீனாவுக்கு உள்ளது. எனினும் அதற்கான முயற்சிகளைக் காணவில்லை.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில், அதற்கான முனைப்புக்கு ஜப்பான் வலுவான அழைப்பை விடுக்கவேண்டும் என்று ஜப்பான் நியூஸ் வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, ஜப்பானிய அரசாங்கம், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து, கடன் வழங்கும் நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை ஆரம்பித்துள்ளது.
வொஷிங்டனில் 20 முக்கிய பொருளாதாரங்களின் குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தின் ஓரத்தில் இந்த முயற்சி அறிவிக்கப்பட்டது.
இந்த முயற்சியில் பங்கேற்குமாறு இலங்கைக்கு அதிக கடன் வழங்கும் நாடான சீனாவும் அழைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடன் மறுசீரமைப்பு முயற்சி
சர்வதேச நாணய நிதியம் கடன்கள் மூலம் ஆதரவை வழங்குவதற்கு ஆரம்பித்திருந்தாலும், கடன் வழங்கும் நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்.
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பை நோக்கிய ஒரு படியை எடுத்து வைப்பதில் ஜப்பான் முன்னிலை வகித்தது பாராட்டுக்குரியது.
ஜி20 அமைப்பு, குறைந்த வருமானம் கொண்ட பொருளாதாரங்களுக்கான கடன் மறுசீரமைப்பு கட்டமைப்பைக் கொண்டுள்ளது, ஆனால் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களுக்கு எந்த அமைப்பும் இல்லை.
இலங்கைக்கான இருதரப்புக் கடன்களில் சீனாவின் பங்கு 40 வீதமாக உள்ளது. எனவே கடன் மறுசீரமைப்பு முயற்சியில் சீனாவின் பங்கு அவசியம், ஆனால் பீய்ஜிங் இதுவரை அதன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவில்லை.
பாதுகாப்பு நலன்
வளரும் நாடுகளுக்கான சீனாவின் கடன்கள் பெரும்பாலும் 'கடன் பொறிகள்' என்று விமர்சிக்கப்படுகின்றன. இதனால் கடன் பெறும் நாடுகள் கடனில் மூழ்கியுள்ளன.
மேலும், தமது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஈடாக, பீய்ஜிங் தமக்கான பாதுகாப்பு நலன்களைப் பெறுவதற்கு முயற்சிக்கிறது.
இதன்படி இலங்கையில் முக்கியமான துறைமுகங்களை இயக்கும் உரிமையை ஏற்கனவே ஒரு சீன
நிறுவனம் பெற்றுள்ளது என்பதையும் ஜப்பான் நியூஸ் சுட்டிக்காட்டியுள்ளது.