இனவாத ஆட்சியை கொண்டு வர முயற்சித்தாரா ஞானசார தேரர்..! ஜன பலய அமைப்பு குற்றச்சாட்டு
ஞானசார தேரரின் காவியுடை விவகாரத்தை வைத்து மீண்டும் இனவாத ஆட்சியொன்றை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜன பலய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இனங்களுக்கு இடையிலான பதற்றத்தை திட்டமிட்டு உருவாக்குவதற்கு கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் கடந்த காலங்களில் அரசாங்க ஆதரவுடன் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் ராஜபக்ச ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக நாட்டில் அச்சமும் பதற்றமும் தொடர்ச்சியாக நிலவக்கூடிய சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்திருந்த போதிலும், யுத்த சூழலை ஒத்த ஒரு பதற்றமான நிலைமையை நாட்டில் பேணுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சமூகங்களுகிடையிலான கிளர்ச்சி
கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் குறிப்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சில குழுவினர் பயன்படுத்தப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரசாரங்களும் இனவாத கருத்துகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதன் மூலம் சமூகங்களுக்கிடையில் சந்தேகத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி, இனங்களுக்கு இடையிலான பதற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

கண்டி - திகண மற்றும் பேருவளை போன்ற பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களையும் இதன் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டியுள்ளது. வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டில் அச்சமான சூழலை உருவாக்கி, அதனை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்றன.
சிலர் தாங்கள் காவி உடை அணிந்திருப்பதன் காரணமாக சட்டத்துக்கு மேலானவர்கள் என்ற மனநிலையுடன் செயற்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் காணப்பட்ட தயக்கமும் இத்தகைய செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்தது. “ராஜபக்ச முகாம்” என்பது ராஜபக்ச குடும்பத்தை மாத்திரம் உள்ளடக்கியதல்ல.
அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட அரசியல் மற்றும் கருத்தியல் வலையமைப்பும் அந்த முகாமின் ஒரு பகுதியாகும்.
கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலம்
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் அவரை முன்னிலைப்படுத்துவதற்கும் ஞானசார தேரர் உள்ளிட்ட சிலர் பயன்படுத்தப்பட்டனர்.
இனங்களுக்கு இடையிலான பதற்றத்தை உருவாக்கி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பேணுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டது.

தற்போது ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்ட விவகாரத்தையும் மீண்டும் இனவாத அரசியலை முன்னெடுப்பதற்கான கருவியாக பயன்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
இதன் பின்னணியில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் குழுவினரும் இனவாத அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். எனவே, மக்கள் மீண்டும் இவ்வாறான இனவாத அரசியல் அணி திரட்டல்களுக்கு இடமளிக்கக் கூடாது.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சமூகங்களுக்கிடையில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.