அதிக புகை வெளியிடும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
வீதிகளில் அதிகளவில் புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிவதற்காகச் சிறப்பு பிரிவு ஒன்றை நிறுவுவதற்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப்பரிசோதனை பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
வீதிகளில் இயங்கும் வாகனங்களை இரகசியமாகக் கண்காணிக்கும் நோக்கில், நாட்டின் பிரதான நகரங்களின் முக்கிய இடங்களில் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்
அதிக புகை உமிழ்வுடன் பயணிக்கும் வாகனங்களை இவர்கள் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்வார்கள். இவ்வாறு பெறப்படும் புகைப்படச் சான்றுகளின் அடிப்படையில், தொடர்புடைய வாகன உரிமையாளர்களுக்கு அன்றைய தினமே வாகனப் பராமரிப்புக் கட்டளைகள் விடுக்கப்படும்.

இத்தகைய உத்தரவைப் பெறும் வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனங்களை உடனடியாகப் பழுதுபார்த்து, குறிப்பிட்ட திகதிக்குள் வேரஹெரவில் அமைந்துள்ள வாகனப் புகைப்பரிசோதனை மையத்திற்குப் பரிசோதனைக்காகக் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உத்தரவை மீறும் அல்லது பின்பற்றத் தவறும் வாகனங்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.