பொருளாதார சரிவைக் காண விரும்பாத ஒரு நல்ல அண்டை வீட்டார் நாம்: ஜெய்சங்கர் பெருமிதம்
எங்கள் வீட்டு வாசலில் இலங்கையில் ஏற்பட்டது போன்ற பொருளாதார சரிவைக் காண விரும்பாத ஒரு நல்ல அண்டை வீட்டாராக நாங்கள் இலங்கைக்கு உதவினோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளின் ஒவ்வொரு அரசியல் நகர்வையும் இந்தியா கட்டுப்படுத்த முயலாது என்றும் ஜெய்சங்கர் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ஆசியா சொசைட்டி மற்றும் ஆசியா சொசைட்டி பொலிசி இன்ஸ்டிட்யூட் நடத்திய 'இந்தியா, ஆசியா மற்றும் உலகம்' என்ற நிகழ்வின் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு சில வருடங்களுக்கும், பிராந்தியத்தில் சில நிகழ்வுகள் நிகழ்கின்றன. இந்த நிகழ்வுகளின் போது இலங்கையிலும் பங்களாதேஸிலும் இந்தியாவுடனான உறவு சுமுகமானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு இருக்கிறது.
பொருளாதார நெருக்கடி
2022இல் கொழும்பின் கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா சரியான நேரத்தில் உதவிகளை வழங்கியதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கொழும்பு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, எவரும் முன்வராத நிலையில், இந்தியா முன்னோக்கிச் சென்றது என்பதை சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், இலங்கைக்கு இந்தியா 4.5 பில்லியன் டொலர்களை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இது இலங்கையின் பொருளாதாரத்தை திறம்பட ஸ்திரப்படுத்தியது. இந்தநிலையில், குறித்த உதவி எந்த அரசியல் நிபந்தனையோடும் இணைக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனித்துவமான இயக்கவியல்
எங்கள் வீட்டு வாசலில் இதுபோன்ற பொருளாதார சரிவைக் காண விரும்பாத ஒரு நல்ல அண்டை வீட்டாராக நாங்கள் அதைச் செய்கிறோம் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
எனவே, இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் இலங்கை கையாள வேண்டிய விடயங்களாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு அண்டை நாட்டிற்கும் அதன் தனித்துவமான இயக்கவியல் உள்ளது என்றும், அவற்றுக்கு கட்டளையிட இந்தியா விரும்பவில்லை என்றும ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |