சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட தகவல்கள் பறிமுதல் - தீவிரமடையும் விசாரணை
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) சில ஆவணங்களை தன்வசம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான அனைத்து ஆவணங்கள் விசாரணைக்காக பெறப்பட்டுள்ளன.
ஆவணங்களாக பெற்ற அதிகாரிகள்
மேலும், சபாநாயகரின் தனிப்பட்ட ஊழியர்களின் விபரங்கள், சம்பள விபரங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு உள்ளிட்ட ஆவணங்களை நாடாளுமன்ற அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்னவினால், மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு, தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இதனிடையே, ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், சபாநாயகர் விவாதத்திற்குத் தலைமை தாங்குவதும், சட்டமூலத்திற்குச் சான்றளிப்பதும் பொருத்தமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.