தென்னிலங்கையை உலுக்கிய வன்முறைகளின் பின்னணியில் யார்.....! மூளையாக செற்பட்ட நபர் கண்டுபிடிப்பு
கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்ற செயல்களில் மூளையாகச் செயற்பட்டவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதிவத்த தெரிவித்துள்ளார்.
மொரட்டுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தெஹிவளை தாக்குதல்
தற்போது வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ள குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை தெஹிவளை - கௌடான, சிரிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், இரு மாணவர்கள் குறித்த வீட்டிற்குள்ளேயே உயிரிழந்தனர். இத்தாக்குதலில் அவர்களின் தந்தையின் கால்கள் காயமடைந்தன.
காயமடைந்தவரின் சகோதரன், படோவிட்ட அஸங்க என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கைக்குண்டுத் தாக்குதல்
அதற்கமைய, இந்த கைக்குண்டுத் தாக்குதலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்மள்ளி என்பவர் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கடத்தலுடன் தொடர்புடைய குறித்த நபரின் வீடு மீதே கைக்குண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வீடு மாறியமையால் அதற்கு அருகில் இருந்த சகோதரரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபருக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.