கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பியங்கர ஜெயரத்னவின் தற்போதைய நிலை
7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சுத்துறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அவர் காலை 6.45 மணி முதல் மாலை 4.15 மணி வரை ஒரு பணிப்பிரிவிற்கு அனுப்பப்படுவார் என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அவர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் 'M' வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடூழிய சிறைத்தண்டனை
முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் செப்டெம்பர் (01) தீர்ப்பளித்திருந்தது.

2014ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்கள் குழுவொன்றுக்கு உணவு வழங்குவதற்காக ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கிலிருந்து 330,000 ரூபா பணத்தை செலவிட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை, குறித்த செயலை செய்வதற்கு ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிரதிவாதிக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 7 ஆண்டுகள் வீதம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தண்டனையை ஏக காலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்குமாறும் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.