மாரவில கடல் பகுதியில் நேர்ந்த பெரும் சோகம் - 5 பேரை இழுத்துச்சென்ற இராட்சத அலைகள்
மாரவில கடல் பகுதியில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (12) பிற்பகல் அதே பகுதியில் அலைகளால் 3 பெண்கள், 2 இளைஞர்கள் உட்பட 5 பேர் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இழுத்துச்செல்லப்பட்ட 3 பெண்களை பிரதேசவாசிகள் உடனடியாக செயற்பட்டு மீட்டுள்ளனர்.
இளைஞர் மாயம்
இதில் உயர்தர கணிதப் பிரிவில் பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்ற குளியாபிட்டிய, அனுக்கனையைச் சேர்ந்த வித்தானகே ஷாலித தனுர்தர மதுஷான் என்ற 21 வயது இளைஞர் காணாமல்போயுள்ளார்.

இவர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் குளியாபிட்டியவிலிருந்து மாரவில கடற்கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.
கடற்கரையில் பாறைகள் அமைக்கப்பட்ட பகுதியில் மணல் திட்டில் நின்றிருந்தபோது, சீறிப்பாய்ந்த இராட்சத அலை ஒன்றில் சிக்கி இவர்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
கடற்படை மற்றும் பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை
பிரதேசவாசிகள் இணைந்து இவரை காப்பாற்ற முயன்றபோதிலும், அவர் கடலில் மாயமாகியுள்ளார். இவரை காப்பாற்றச்சென்ற மற்றொரு இளைஞர் உயிர்தப்பியுள்ளார்.
காணாமல்போன இளைஞரை தேடி கடற்படை மற்றும் பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கடலில் இறங்குவதையோ, நீராடுவதையோ தவிர்க்குமாறு மாரவில பொலிஸாரால் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.