மாதம் 2000 ரூபா வாடகையில் தங்கியிருக்கும் 111 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தற்போதைய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 111 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 2,000 ரூபா வாடகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோட்டே, மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடமைப்புத் தொகுதியில் உள்ள 111 வீடுகளே இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உதவிப் பொதுச் செயலாளரும் தகவல் அதிகாரியுமான ஹன்ஸ அபேரத்ன இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

10ஆவது நாடாளுமன்றத்தின் 4 அமைச்சர்கள், 9 பிரதி அமைச்சர்கள் மற்றும் 98 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் மாதந்த வாடகையாக 2,000 ரூபா மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய வாடகை நிலுவைத் தொகை எதுவுமில்லை. மாதிவெல வீடமைப்புத் தொகுதி தொடர்பில் 10ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தனியாக வீட்டு வாடகைப்படி எதுவும் வழங்கப்படவில்லை.
மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் கே. வி. சமந்த வித்யாரத்ன, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க ஆகியோர் இவ்வாறு வீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
வசந்த பியதிஸ்ஸ, நலின் ஹேவாகே, கமகேதர திசாநாயக்க, நாமால் சுதர்ஷன, ஆர். எம். ஜெயவர்தன, ரத்ன கமகே, அருண் ஹேமச்சந்திர, வி. பி. சரத் மற்றும் நாமால் கருணாரத்ன உள்ளிட்ட பலர் வீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஆளும்கட்சி உறுப்பினர்கள் தவிர்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிவஞானம் ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம், இராமநாதன் அர்ச்சுனா, பழனி திக்காம்பரம், வி. எஸ். இராதாகிருஷ்ணன், ரிஷாட் பதியுதீன், எச். எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, காதர் மஸ்தான், இம்ரான் மஹ்ரூஃப், சாமர சம்பத் தசநாயக்க, தயாசிரி ஜெயசேகர, ஜே. சி. அலவத்துவல, ரொஹான பண்டார, திலீப் வேதஆரச்சி, நலின் பண்டார, கின்ஸ் நெல்சன், கவிந்த ஜெயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, ரோஹிணி குமாரி விஜேரத்ன உள்ளிட்ட பலரும் இவ்வீடுகளைப் பெற்றுள்ளனர்.