பிரபல புலம்பெயர் தொழிலதிபரின் அழைப்பின் பேரில் யாழ் தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் செய்த இந்திய துணைத் தூதுவர்(Photos)
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரிக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய பிரதி தூதரகத்தின் பிரதானியான, இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
யாழில் 75 வருட பாரம்பரியத்தை கொண்ட தொழிநுட்பக் கல்லூரிக்கு பல உதவிகள் தேவைப்படுவதாக பிரபல தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்திருந்தார்.
அவரின் வேண்டுகோளிற்கிணங்க பிரதி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரிக்கு சமூகமளித்துள்ளார்.
உதவி தொடர்பான கலந்துரையாடல்
இதன்போது இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் தொழிநுட்பக் கல்லூரிக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிநுட்பக் கல்லூரிக்கு நேரில் சென்று கல்லூரியின் தேவைப்பாடுகள், மாணவர்களின் கற்றல் நடவடிக்கை மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகள் தொடர்பில் அங்கு கல்வி கற்பிக்கும் விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள குறித்த கல்லூரியானது பாரம்பரியம் நிறைந்ததும் 75 வருடங்களை தாண்டி இயங்க கூடியதுமான ஒரு கல்லூரியாகும்.
பூர்த்தி செய்யப்படாத அடிப்படை வசதிகள்
அந்த கல்லூரி எவ்வித வளர்ச்சிப்படிகளை காணாமலும், மாணவர்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமலும், எவ்வித அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படாமலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இயங்கி வருகிறது.
இதேவேளை தொழிநுட்பக் கல்லூரியில் துறைசார்ந்த கற்கைநெறிகளை கற்கும் மாணவர்கள் 25 வருட பழமையான கருவிகளை உபயோகித்து புதிய தொழிநுட்பங்களை கற்று வருகின்றனர்.
இவ்வாறாக இருக்கும் இந்த கல்லூரியை மீள் நிர்மாணிக்க, அங்கு கற்கும் மாணவர்களை அறிவுத்திறன் கொண்டவார்களாக உருவாக்க, கருவிகளை பெற்றுக்கொடுக்க அந்த கல்லூரியின் பழைய மாணவர்கள் உட்பட அனைவரும் முன்வர வேண்டும் என தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.












