கடலோடு தன் கரை பகிரும் வல்வெட்டித்துறை கடற்கரையின் இன்றைய நிலை(Photos)
யாழ்ப்பாணத்தின் வட முனையில் இருக்கும் கிராமங்களில் புகழ்பெற்ற கிராமங்களில் ஒன்று வல்வெட்டித்துறை.
ஈழத்தமிழர்களை உலகப்பரப்பில் முன்கொண்டு சென்ற பெருந் தலைவரை பெற்ற மண் என்று ஈழத்தமிழர் மகிழும் மண்ணாக வல்வெட்டித்துறை காணப்படுகிறது.
கடலோடு தன் கரை பகிரும் யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் இதுவும் ஒன்று.
கடற்கரையின் கோலம்
பருத்தித்துறை முதல் வல்வெட்டித்துறை வரையான கடலோரப் பகுதிகளில் அதிகளவில் அழுக்குகள் கடற்கரையோரம் கொட்டப்படுவதால் அவை அழகிழந்து தோற்றமளிப்பதாக பார்ப்போர் உரைக்குமளவுக்கு நிலை கைமீறிச் செல்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்திடுகின்றனர்.
பொதுவாக கடற்கரையோரங்கள் அழுக்குகளை கொட்டும் போது இயற்கையான முறையில் அவற்றை அகற்றி மண்ணை தூய்மையாக்கும் இயல்புடயவை.
மணற்பாங்கான தரைகளில் இது இலகுவாக நடந்துவிடும். பருத்தித்துறை முதல் வல்வெட்டித்துறை வரையான கடலோரப் பகுதிகளில் சுண்ணம்புக் கற்பாறைகளால் நிலம் நிறைந்திருக்கின்றது.
கழிவுகளை இவை இயல்பாக அகற்றுதல் கடினமென கடலோரம் பற்றிய தன் அறிவைப் பகிர்ந்தார் ஒரு மீனவர்.
கடலோர வீடுகளின் செயற்பாடு
வல்வெட்டித்துறை கடற்கரை வீதியில் கடலோரமாக உள்ள வீடுகளின் கழிவு நீரினை கொண்டு செல்லும் வடிகால் அதனை கடல் நீருடன் கலக்கும்படி கட்டமைத்திருப்பதனை அவதானிக்கலாம்.
இதனால் கரையோர கடல் நீர் அழுக்கு நிறத்தில் இருப்பதனையும் அவதானிக்க முடிகிறது.
அந்தக் கரையினையே மீனவர்கள் இறங்கு துறையாகவும் பயன்படுத்துவதையும் காணமுடிகிறது.
வீதிக்கும் கடற்கரைக்கும் இடையில் பல இடங்களில் கழிவுகளை கொட்டுவது நீண்ட நாட்களாக தொடர்ந்து இடம் பெறுகின்றமைக்கு சான்றாக நாட்பட்ட குப்பை மேடுகளை காணப்படுகிறது.
கரையோர வீடுகளில் வசிப்போரும் தங்கள் வீட்டுக்கழிவுகளை கடற்கரையில் கொட்டிவிடுவதை இயல்பான வழமையாக கொண்டுள்ள விடயம் கவலையளிப்பதாக கூறப்படுகிறது.
சுகாதார பரிசோதகரின் கருத்து
கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வுகள் மூலம் மக்களுக்கு அறுவுறுத்திய போதும் மக்களிடையே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் குறைவாக இருப்பதாக சுகாதார பரிசோதகர் ஒருவர் குறிப்பிட்டார்.
கடற்கரையோரம் உள்ள பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் செற்றிட்டங்களை மேற்கொண்ட போதும் தொடர்ந்து அப்பகுதிகள் சுத்தமாக பேணப்படுவதற்கு பொதுமக்கள் கரிசணை காட்டினால் மட்டுமே சாத்தியமாகும் என மேலும் குறிப்பிட்டார்.
எவ்விடமாக இருந்தாலும் கழிவுகளை குப்பைகளை கொட்டும் போது அது மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் சூழலுக்கும் தீங்காகவே அமையும் எனவும் தாமும் அப்பகுதிகளில் செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்ததாகவும், சில வேளை பொது மக்கள் சுட்டிக்காட்டல்களை ஏற்றுக்கொள்ளாது முரண்படும் சந்தர்ப்பங்களும் நிகழ்ந்ததாகவும் தன் கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
மாணவர்களிடையே சூழல் பற்றிய விழிப்புணர்வோடு கழிவு முகாமைத்துவம் பற்றிய எண்ணக்கருக்களை ஆரோக்கியமான முறையில் உருவாக்கி விட்டால் எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் எனவும் தன் முன்மொழிவையும் பதிவு செய்தார்.
தன் வீடு தன் சூழல் எல்லாம் தனக்கானதே
இலங்கையின் ஏனைய பகுதிகள் போலல்லாது யாழ்ப்பாணம் தனித்துவமிக்க இடமாக விளங்குகிறது.
தரையமைப்பு காலநிலை கோலம் உள்ளிட்ட இயற்கையானாலும் சரி பேசும் மொழி ,கலை கலாச்சாரம் என மனிதவியல் கோலமாக இருந்தாலும் சரி தனித்துவம் மிக்க பூமியாக யாழ்ப்பாணம் அமைகிறது.
இலங்கையில் ஆலயங்களை அதிகம் கொண்ட நிலமாகவும் புகழ்பெற்று விட்டது. இத்தகைய பூமியில் சூழலை அழுக்குகளால் நிறைத்து அதன் அழகை தாமே கெடுத்துக் கொள்ளும் நிலை பொருத்தமற்றது.
வரும் முன்னே தடுத்து விடல் ஒன்று தான் நன்மையானது. யாழ்ப்பாணத்திற்கு அவசியமான ஒரு விடயமாக சிறந்த கழிவு முகாமைத்துவம் தேவைப்படுகின்றது.
துறைசார் வல்லுநர்கள் மற்றும் பொறுப்பானவர்களின் முயற்சியினால் யாழ் மாவட்டத்திற்கென தனியானதொரு கழிவு முகாமைத்துவத் துறை உருவாக்கப்படலே இத்தகைய சூழலை இல்லாதொழிக்கும் என யாழ்.கல்விச் சமூகம் சார்பாக பேசவல்ல ஒருவரிடம் கருத்துக் கேட்ட போது தன் கருத்துக்களை முன் மொழிந்திருந்தார்.
அண்மைக் காலமாக யாழில் குப்பைகளால் பல இடங்கள் தம் தூய்மையை இழந்து கெட்டுப் போவதனை அவதானிக்க முடிவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.