வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை மீளப்பெறச் சென்றவர் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பரமேந்திரம் ரஜீவ்குமார் (வயது – 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்ப முரண்பாடு
அராலிப் பகுதிக்குக் கனடாவிலிருந்து விடுமுறையில் வந்த தம்பதியினருக்கிடையே குடும்ப முரண்பாடு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கனடாவில் இருந்து வந்த பெண்ணின் தந்தையார் கொழும்பிலிருந்து வருகை தந்து, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தனது மகள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்துக் குடும்ப முரண்பாடு சுமூகமாகத் தீர்க்கப்பட்ட நிலையில் தனது மகள் மற்றும் மருமகனுடன் கொழும்புக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவித்து குறித்த பெண்ணின் தந்தை முறைப்பாட்டை மீளப்பெறுவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு நேற்றுச் சென்றபோது, அங்கு மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக 1990 அம்புலன்ஸ் ஊடாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும்,
அவர் இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



