யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையில் நீர் வசதி இன்றி நோயாளர்கள் அவதி: உதவி கோரும் நிர்வாகம்
யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று (14.08.2023) முதல் தண்ணீர் வசதி இன்றி
நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, தமது மருத்துவமனைக்கு நீர் வழங்கும் பிரதான நீர்ப்பம்பி செயலிழந்துள்ளமையினால் நேற்று முதல் தண்ணீர் வசதி இன்றியுள்ளதாகவும், ஆனால் சிறிய ரக தண்ணீர் பம்பி மூலம் பகுதி பகுதியாக நீர் வசதி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதனை சீர் செய்வதற்க்கு புதிய தண்ணீர் பம்பி கொள்வனவு செய்வதற்க்கு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் அனுமதியை பெற்று மீளமைக்க கால தாமதமாகலாம் என்றும் யாராவது 7.5 குதிரை வலு கொண்ட நீர்ப்பம்பி ஒன்றினை நன்கொடையாக வழங்கினால் தண்ணீர் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
மருத்துவமனையின் குடிநீர் வசதி
மேலும், மருத்துவமனையில் மலசலகூட பயன்பாடு உட்பட குடிநீர் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் நோயாளர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறித்த மருத்துவமனையின் குடிநீர் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்டு வடிகட்டப்பட்ட குடிநீர் வசதியை சந்நிதியான் ஆச்சிரம் செய்து கொடுத்திருந்தது. அதனையே நோயாளர்கள் குடிநீருக்காக நம்பியிருந்தனர்.
ஆனால் அதில் கூட இன்று குடி நீரை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதுடன், தேசிய நீர் வழங்கல் சபையின் நீர் விநியோகமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஒரு லீட்டர் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் ரூ.130ல் இருந்து 150 வரையும் விற்பனை ஆகின்ற நிலையில் அதனையே நோயாளர்கள் கடைகளில் கொள்வனவு செய்து பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |