நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலைகளின் பின்னணி என்ன..!
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கொலை சம்பவம் பதிவாகும் சூழல் இலங்கையில் தற்போது உருவாகியுள்ளது.
சாதாரண குடும்ப தகராறு தொடக்கம் பரம்பரை பகை வரையில் அனைத்து விடயங்களுக்கும் கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது.
இதனை உறுதிப்படுத்துவதாகவே கடந்த மாதம் நெடுந்தீவை உலுக்கிய படுகொலைகள் அமைந்தன.
நெடுந்தீவு...!
இந்த கொலைகள் அதன் பின்னணி என்பவற்றை ஆராய்வதற்கு முன்னர் நெடுந்தீவை பற்றிய சில விடயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் இன்று பல அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் இருந்தாலும் அதன் அமைவிடத்தையும் அதனூடாக மேற்கொள்ளக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளையும் மையமாக கொண்டு இலங்கையுடன் ஒட்டி உறவாடும் பல நாடுகள் உள்ளன.
இதேபோன்றொரு அமைவிட முக்கியத்துவத்தை கொண்ட இடமாக தான் நெடுந்தீவு உள்ளது.
இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாக நெடுந்தீவு உள்ளது.
சோழர் வம்சம், போர்த்துகீச, ஒல்லாந்த, பிரித்தானியர் காலனித்துவ காலத்திலிருந்து சிறந்த வரலாற்றைக் கொண்ட ஒரு அற்புதமான தீவாக நெடுந்தீவு அமைந்துள்ளது.
தீவு முழுவதும் பவளம், சுண்ணாம்புக் கல்லை அடிப்படையாகக் கொண்டது.
இன்று இங்கு பொருளாதார வசதிகள் அருகிய தமிழ் மீனவ சமூகத்தைச் சார்ந்த 2500 இருந்து 3000 மக்களே கடும் சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.
மேலும் இவர்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை அரச சேவைகள் கூட கிடைப்பதில்லை என தெரியவருகின்றது.
இலங்கை இராணுவம் நெடுந்தீவை ஆக்கிரமித்தைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் யாழ் குடாநாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ புலம்பெயர்ந்து விட்டார்கள்.
நெடுந்தீவை உலுக்கிய கொலைகள்
இவ்வாறான ஒரு பின்னணியை கொண்ட நெடுந்தீவில் கடந்த மாதம் இடம்பெற்ற படுகொலையானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் தங்கியிருந்த ஐவர் அதிகாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டதுடன் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை(27.04.2023) உயிரிழந்தார்.
இந்த படுகொலைக்கான காரணம் இது தான் என ஒரு விடயம் முன்வைக்கப்பட்டாலும் அரசியல் வட்டாரங்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் பல கேள்விகளும் சில கருத்து கணிப்புகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் நெடுந்தீவில் இருந்து பெரும்பாலான மக்கள் யுத்தத்திற்கு பின்னர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். இன்னும் சிலர் தமது அடிப்படை தேவை கருதி வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர்.
இருப்பினும் அங்கு கடற்படை,இராணுவம் என படையினர் குவிக்கப்பட்டு தான் காணபடுகின்றனர்.
கடந்த மாதம் ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வீட்டிற்கு அருகாமையில் சுமார் 300 கடற்படை வீரர்களை கொண்ட கடற்படை முகாமொன்றும் காணப்படுகின்றது.
மேலும் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் அதிகமான இராணுவம் நிலை கொண்டிருக்கின்ற ஒரு இடமாகவே தீவகம் உள்ளது.
அந்த யாழ் குடாவின் தீவக பகுதிக்கு, சென்று வருபவர்கள் கூட ஏன் அங்கு செல்கின்றார்கள்? என்ற முழுமையான விடயங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற அளவிற்கு கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.
படையினர் கட்டுப்பாட்டில் தீவகம்
இவ்வாறு அன்று தொடக்கம் தீவக பகுதியை படையினர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
இப்படியிருக்கையில் நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் தங்கியிருந்த அறுவர் வெட்டி கொடூரமாக கொலை செய்யபட்டமைக்கும் கடற்படையினருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா என கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமது அலுவலகத்தில் (23.04.2023) அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நெடுந்தீவில் இடம்பெற்ற கொலைக்கும் கடற்படைக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இதேவேளை பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ், யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் அதிகமான இராணுவம் நிலை கொண்டிருக்கின்ற நெடுந்தீவில் இடம்பெறும் கொலை, கொள்ளை போன்ற செயல்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் எதாவது ஒரு நடவடிக்கையில் உள்வாங்கப்பட்டிருக்கலாம்.
அதாவது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களாக இருப்பார்கள் அல்லது துணை இராணுவ குழுவினருடன் இணைந்து இயங்குவார்கள்.
எனவே நெடுந்தீவு படுகொலைக்கு கடற்படையினருக்கும் தொடர்பிருக்கலாம் என தெரிவித்திருந்தார்.
இது முதல் தடவையில்லை
இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் நெடுந்தீவில் இவ்வாறான படுகொலைகள் இடம்பெறுவது இது முதல் தடவையில்லை.
1985ம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குமுதினி படகில் பயணித்து கொண்டிருந்த ஆறு மாதக் குழந்தை உட்பட 33 பேர் நடுக்கடலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் முழு உலகையும் உறைய வைத்தது.
இதேபோன்று கடந்த பெப்ரவரி (23.02.2023) ஆம் திகதி அனலைதீவில் வீடு புகுந்த வன்முறைக் கும்பல் அங்கு வசித்த வயோதிபர்கள் இருவர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட மூவரை கடுமையாகத் தாக்கி 4 பெறுமதியான தொலைபேசிகள் மற்றும் 4 தங்க வலையல்கள் உள்ளிட்ட 13 லட்சம் பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டனர்.
இதன்போது சம்பவத்தில் கனடாவில் வசிக்கும் அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் சுப்ரமணியம் (குருசாமி வயது 75) என்பவர் கால்கள் அடித்து முறிக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
அவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக கனடா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை மற்றொரு சம்பவமாகும்.
இங்கு இடம்பெற்ற பெரும்பாலான கொலை, கொள்ளை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாக காணப்படுகின்றனர்.
இங்கிருந்து வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்தவர்களின் தாய்,தந்தை மற்றும் உறவினர்களில் பெரும்பாலானோர் தீவக பகுதியில் வசிக்கின்றனர்.
இந்த தீவகத்தில் பெருமளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தாலும் அது பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் ஓர் வரலாற்று தளமாகவே பார்க்கப்படுகின்றது.
தமிழர் பகுதியில் புத்தர்
இன்று தமிழர்களின் பெரும்பாலான இடங்களில் புத்தர் வந்து அமர்வது பேசு பொருளாக மாறிவிட்டது.
அதாவது குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை மற்றும் கச்சத்தீவு உள்ளிட்ட பல இடங்களில் நேரடியான பௌத்தமயமாக்கல் இடம்பெறுவது போன்று இங்கு திரைமறைவில் அது நடைபெறுகின்றது என்றால் அது மிகையாகாது.
அதற்கான காய்நகர்தலாக நெடுந்தீவில் இவ்வாறான கொடூரமான சம்பவங்களை பதிவாகி அதனூடாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை தீவகத்திலிருந்து முழுமையாக வெளியேற்றுவதற்கான ஒரு செயற்பாடாக இந்த கொலைகள் இடம்பெறுவதாக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
வெளியேறும் மக்கள்
இது தொடர்பில் தீவக சிவில் சமூகத்தின் உப தலைவர் கருணாகரன் நாவலன், ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
அதாவது சுவிசர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த மூவர் உட்பட ஐந்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளமை நெடுந்தீவிற்கு மட்டுமல்லாமல் தீவகத்திற்கே பாதுகாப்பற்ற தன்மை நிலவுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டில் படுகொலை செய்யப்பட்ட பெண்மணியின் கணவர் 1985 இல் குமுதினி படகுப் படுகொலையில் கொலை செய்யபட்டார். குறித்த பெண்மணி பல சமூக செயற்பாடுகளை செய்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் நெடுந்தீவு திருக்கேதீச்சரம் சிவன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்காக சுவிஸிலிருந்து மூன்று பேர் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவரும் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையிலேயே நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில், சுவிசர்லாந்திலிருந்து வருகை தந்த மூவர் உட்பட அறுவர் படுகொலை செய்யபட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறும் போது மக்கள் மத்தியில் அச்சம் எழ ஆரம்பித்துள்ளது.
எனவே தமிழ் மக்கள் மெல்ல மெல்ல அந்த இடங்களை விட்டு வெளியேறி கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தீவகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனும் போது அங்குள்ள மக்கள் தீவகத்தை விட்டு முழுமையாக வெளியேறும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
கொலைகளின் பின்னணி
இதனடிப்படையில் பார்த்தோமானால் தீவகத்தில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானால் வெளிநாடுகளில் வசிக்கும் தீவக மக்களின் உறவுகள் அவர்களை அங்கு வசிக்க விடமாட்டார்கள். மேலும் சிலர் தனிப்பட்ட அச்சம் காரணமாக அங்கிருந்து செல்ல எத்தனிப்பார்கள்.
எனவே தீவக மக்கள் முழுமையாக அங்கிருந்து அவர்களாவே செல்லும் நிலை உருவாகும்.
கடற்படை மற்றும் இராணுவம் இருந்தும் அங்குள்ள மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபடவில்லை.
மேலும் இங்கு இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் அழுத்தத்தின் காரணமாக விசாரிக்கபடுகின்றதே தவிர பொலிஸாரோ குற்றப் புலனாய்வு அதிகாரிகலோ இந்த சம்பவங்கள் தொடர்பில் பெரும் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
எனவே தான் இந்த கொலை,கொள்ளை மற்றும் வன்முறை சம்பவங்களில் கடற்படையினருக்கும் தொடர்பு இருக்கின்றதா? தீவகத்தில் வாழும் மக்களை வெளியேற்றி தீவகத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பின்னணியில் இவை இடம்பெறுகின்றதா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
