வீண்விரய செலவீனங்களை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மனிதர்களின் அன்றாட வீண்விரய செலவீனங்களை தவிர்க்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
76 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில வருடங்களாக கோவிட் தொற்று நோய் எற்பட்டிருந்தது. அதில் பல உயிரிழப்புக்களும், மனிதர்களின் மனங்களிலும் கஷ்ட சூழ்நிலை காணப்பட்டது. மேலும் பொருளாதார நெருக்கடி நிலையும் ஏற்பட்டிருந்தது.
எனவே இதனை கடந்து வந்த எமது அரசாங்கம் புதிய உத்திகளுடனான திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதிலும், உணவு உற்பத்தியிலும் ,ஏற்றுமதி விவசாயத்திலும் முன்னேற்றம் காண வேண்டியதாக இருக்கின்றது.
பாரம்பரிய சிறுதானிய உற்பத்தியிலும், உள்ளூர் உணவுப்பொருட்கள் மேம்படுத்த வேண்டும். ஏற்றுமதியில் நவீனமயமாக்கும் சிந்தனையாளர்களாக வளர்க்க வேண்டும்.
எனவே எமது நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தில் இருந்து 77 ஆவது சுதந்திர தினத்திலாவது இந்த திட்டங்கள் அனைத்தும் கிராம மட்டத்தில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே இலக்கு அதன் ஊடாக ஒரு சுபீட்சமான வாழ்க்கையினை காணமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |