இலங்கை தமிழரசுகட்சியின் தீர்மானத்துக்கு எதிராக மீண்டும் நீதிமன்றம் தடை உத்தரவு
இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணி பொருளாளரும் , மத்தியகுழு உறுப்பினருமான பீற்றர் இளம்செழியனை கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு மீண்டும் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கு விசாரணையானது யாழ். நீதவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர், பொது செயலாளர், நிர்வாக செயலாளர் அவர்களுக்கு பூரண விளக்கம் வழங்கும் பொருட்டு நேற்றில் (22) இருந்து எதிர்வரும் 06.05.2022 ம் திகதி வரை மீண்டும் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணி பொருளாளரும் , மத்தியகுழு உறுப்பினருமான பீற்றர் இளம்செழியன் தம்மை கட்சியில் இருந்து, இலங்கை தமிழரசு கட்சி பதில் பொது செயலாளர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் நீக்கியது தவறு என யாழ். மாவட்ட நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவிற்கு ஆதரவாக சட்டத்தரணி கலாநிதி குருபரன் முன்னிலையாகியிருந்தார்.
பிரதிவாதிகளாக இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த மனுவை (08.04.2022) அன்று யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் கவனத்தில் எடுத்த நீதிபதி சசிதரன் அன்றில் இருந்து 14 நாட்களுக்கு (22.04.2022) வரை பீற்றர் இளம்செழியனை கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பாக இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்து 14 நாட்களுக்குள் அவரை கட்சியில் இருந்து நீக்கியமைக்கான விளக்கத்தை யாழ்பாணம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கட்டளை பிறப்பித்திருந்தார்.
நீதிமன்ற கட்டளையை சம்பந்தபட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சேர்ப்பதில் அரச
விடுமுறைகளும் ஒரு தடையாக இருந்தது என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அதை சாட்டாக
வைத்து பீற்றர் இளஞ்செழியனை தொடர்ந்தும் கட்சியில் இருந்து பதவி
நிலைகளிலிருந்தும் நீக்கி அவரது பெயருக்கு அவதூறு வருகையில் தொடர்ந்து
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஒருசில உயர் பீட உறுப்பினர்களும் மற்றும் கீழ்
நிலை உறுப்பினர்களும் நடந்து கொள்ளுவதாக இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்
பலர் குற்றம் சாட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



