தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு இணக்கம் தெரிவிக்காததையடுத்து இது குறித்து கட்சி உரிய காலத்தில் தீர்மானம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய குழுவின் கூட்டம் நேற்று (19) கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் வவுனியாவில் நடைபெற்றுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்
இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் கொள்கை ரீதியாகத் தாங்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டத்தை ஆதரிக்கின்றனர் என்றும், அதைத் தங்கள் கருத்தாகப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
சி.வி.கே.சிவஞானம், குருகுலராஜா, குலநாயகம், மட்டக்களப்பைச் சேர்ந்த ரஞ்சனி, குகதாசன், கலையரசன், மன்னாரைச் சேர்ந்த பரஞ்சோதி, கோப்பாய் பரஞ்சோதி, இரத்தினவடிவேல், ஆர்னோல்ட், இளஞ்செழியன் போன்றோர் தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர்.
விவாதத்தின் முடிவில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் "உரிய சமயத்தில் கட்சி உரிய முடிவை எடுக்கும். மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளையும் அவர்களின் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து உரிய வேளையில் முடிவைக் கட்சி எடுக்கும்" என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறியவந்துள்ளது.
இந்த விவகாரத்தையொட்டி தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கள் சிலவற்றை மாவே சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டத்தை முன்னெடுத்தால் சிங்கள தரப்பில் தமிழ் எதிர்ப்புணர்வு எகிறும் என்ற சாரப்பட சம்பந்தன் தமக்குக் கருத்துத் தெரிவித்தார் என்பதைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ள சிறீதரன் எம்.பி, தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டம் முட்டாள்தனமான யோசனை என்றோ, பைத்தியக்காரத்தனமான யோசனை என்றோ தன்னிடம் சம்பந்தன் குறிப்பிடவில்லை என்றார்.
மத்திய குழு
இது தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் முடிவு எட்டப்படும் வரை தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்து எதுவும் வெளியிடாமல் அதீத மௌனம் பேணினார் என கூட்டத்தில் பங்குபற்றிய சிலர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானம் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட பின்னர் இவ்விடயத்தில் சுமந்திரனின் கருத்து என்ன என்று மாவை சேனாதிராஜா வினாவியுள்ளார் எனத் தெரிகின்றது.
இவ்விடயத்தை தொடர்ந்து சம்பந்தன் ஐயா தமக்குக் கூறிய கருத்துக்களைச் சுமந்திரன் அப்போது விவரித்தார். ''மூன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்களையும் நாம் இப்போதைக்குச் சம தூரத்திலேயே வைத்திருக்க வேண்டும்.
யாரோடும் நெருங்கத் தேவையில்லை. எங்களின் நிலைப்பாடு யாது என்பதை மூவருக்கும் நாம் தெரியப்படுத்தி விட்டோம். தேர்தல் தொடர்பான அவர்களின் அறிக்கைகள் வரட்டும்.
அவர்களின் கருத்து நிலைப்பாடுகளைக் கவனத்தில் எடுத்து, உரிய சமயத்தில் நாம் கூடி ஒரு தீர்மானத்தை எடுக்கலாம்” என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |