தமிழரசுக் கட்சி வழக்கு ஒத்திவைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தினால் ஜூலை 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கை விரைந்து முடிவுறுத்துவதற்கு வசதியாக எதிராளிகள் அனைவரும் தமக்குள் ஒன்றுபட்டு ஒரு நிலைப்பாட்டில் தங்கள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்வர் என நேற்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டமையை அடுத்து, அதற்கு வசதியாக கால அவகாசம் வழங்கி, வழக்கை ஜூலை 19 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதேசமயம் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவு மற்றும் பதவியேற்புத் தொடர்பில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த கட்டாணை உத்தரவு, இன்று முதல் மீண்டும் ஜூலை19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுவரை எதிராளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பில் தமது தரப்பு அவதானங்களை வழக்காளியின் சட்டத்தரணி எடுத்துரைத்தார்.
ஏழு பிரதான எதிராளிகளும் மூன்று வெவ்வேறு விதமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அவற்றுக்கு இடையே இணக்கமான ஒரு நிலைப்பாட்டைக் கண்டு, சுமுகமாக விடயத்தைத் தீர்ப்பது சாத்தியமற்றது என்றார் வழக்காளி தரப்புச் சட்டத்தரணி.
ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை
எதிராளிகள் தரப்பில் தமக்காகத் தாமே நேரில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இது விடயத்தில் கட்சி ரீதியாக எதிராளிகள் அனைவரும் இப்போது ஒன்றுபட்ட தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்றும், அதன் அடிப்படையில் ஒரே நிலைப்பாட்டை பதில் மனுக்களாக அவர்கள் சமர்ப்பிப்பார்கள் என்றும், அந்தச் சமர்ப்பணத்தின் அடிப்படையில் இணக்கமான முடிவு ஒன்றுக்கு வழக்காளியும் எதிராளிகளும் வர முடியும் என்றும் குறிப்பிட்டார்.
அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அந்தப் பதில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 19ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி, வழக்கை அந்தத் திகதிக்கு ஒத்திவைத்தது.
இதற்கிடையில், வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது கிளிநொச்சியைச் சேர்ந்த கட்சி உறுப்பினரான சண்முகராஜா ஜீவராஜா என்பவர் தம்மையும் இடையீட்டு எதிராளியாச் சேர்த்துக் கொள்ளும்படி விண்ணப்பித்தார். எதிராளிகளில் ஒருவரான சிறீதரன் எம்.பியின் சட்டத்தரணி வி.புவிதரனே அவருக்காகவும் முன்னிலையானார். எதிராளிகள் தரப்பில் அவரை ஓர் எதிராளியாகச் சேர்த்துக்கொள்வதற்கு ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |