ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக 15 வாக்குகள் கிடைக்கும் சாத்தியம்?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில், இலங்கைக்கு எதிரான திருத்தப்பட்ட வரைபொன்று, இன்றையதினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இந்தத் திருத்தப்பட்ட வரைப்பு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்ரனீக்ரோ, வட மசிடோனியா ஆகிய நாடுகள் அடங்கிய குழுவின் ஊடாகவே இவ்வரைபு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்து.
இந்நிலையில், வரைபின் மீதான வாக்கெடுப்பு எப்போது இடம்பெறுமென குறித்த குழு அறிவிக்கவில்லையென செ ய்திகள் வெளியாகியுள்ளன.
வாக்கெடுப்பானது இம்மாதம் 20ஆம் திகதி அல்லது 21ஆம் திகதி இடம்பெறுமெனத் தாங்கள் நினைப்பதாகவும், இன்று வரைபானது சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், தாங்கள் வாசித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்வோமென இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.
புதிய வரைபின் அடிப்படையில் ஒத்திசைவான தீர்மானமொன்று எட்டப்படலாமா என வினவப்பட்டபோது, தாங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த சில விடயங்களை அவர்கள் இட்டுள்ளதாகவும், பெரும்பாலும் ஒத்திசைவான தீர்மானமொன்றுக்குச் செல்லமாட்டோமெனவும், அவர்கள் வைத்திருக்கும் விடயங்களை அவர்கள் விட மாட்டார்கள் எனவும், அவர்கள் கூறுவதைத் தாங்கள் ஏற்கமாட்டோமென கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் உறுப்பினர்களிடத்தே வாக்களிப்பின்போது ஆதரவு பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, பலம் வாய்ந்த நாடுகள் அச்சுறுத்தலை விடுப்பதாகவும், வாக்களிக்கும் அங்கத்தவர்களை அவர்களுக்கு அச்சமளிக்க வைப்பதாகவும், இலங்கைக்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்காக நிதிகளையும், கடன்களையும் உறுதியளித்துள்ளதாக கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, வாக்களிக்கும் நாடுகளின் மனித உரிமைகள் பதிவுகளைப் பார்க்கமாட்டோம் என அவர்கள் உறுதியளித்துள்ளதுடன், அந்தவகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையானது முழுமையாக மேற்குலகத்துக்குச் சார்பானதொன்று எனவும், முதல் நாளில் 21 நாடுகள் தங்களுக்கு சார்பாகக் கதைத்ததாகவும், ஆனால் எந்தவொரு மேற்குலக நாடுகளும் இருக்கவில்லை என கொலம்பகே தெரிவித்துள்ளார்.
தங்களுக்கெதிராகக் கதைத்த 15 நாடுகளில், சொலமன் தீவுகளைத் தவிர அனைத்தும் மேற்குலக நாடுகளெனவும், சொலமன் தீவுகளும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் கொலனியென கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஒருமித்த தீர்மானமொன்றுக்கான இறுதி நிமிட கோரிக்கையொன்றுக்கு மத்தியிலும் வாக்களிப்புக்குச் செல்ல இலங்கை தீர்மானித்துள்ளதாக தகவல்மூலங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை தோற்கடிக்கப்படுமெனத் தெரிந்தும் அரசாங்கம் வாக்களிப்புக்குச் செல்வதாக மூலங்கள் குறிப்பிட்டுள்ளன.
மனித உரிமைகள் சபையில் 10 வாக்குகளை இலங்கை கொண்டிருப்பதாகவும், கொவிட்-19 புதைப்பு பிரச்சினைத் தீர்மானத்துடன் அது 15-ஆக அதிகரிக்குமெனவும், இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா வாக்களிக்காமலிருக்குமெனவும், ஏறத்தாழ 29 நாடுகள் தீர்மானத்துக்கு சாதகமாக வாக்களிக்குமென குறித்த தகவல்மூலங்கள் மேலும் கூறியுள்ளன.