மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து பேசப்பட்டது.
அத்தோடு, தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக அனுமதியை மீண்டும் வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டது.
கடற்றொழில் நடவடிக்கை
கடற்றொழில் நடவடிக்கைகளின் போது சில தொழில்களுக்கான வழங்கப்படுகின்ற பாஸ் நடைமுறை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் குறித்த தொழில்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள கண்டல் தாவரங்களை வெட்டி கடற்றொழில் நடவடிக்கை களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் இதனால் எதிர் காலத்தில் கடலரிப்பு ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் எனவே குறித்த கண்டல் தாவரங்களை வெட்டுகின்ற கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என கலந்து கொண்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.