இனப்படுகொலைகளை மேற்கொள்ளும் இஸ்ரேல் - சர்வதேச மன்னிப்பு சபை
ஆக்கிரமிக்கப்பட்ட காசா (Gaza) பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் (Israel) இனப்படுகொலை செய்து வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
தமது அமைப்பு நடத்திய ஆய்வில் இதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக, சர்வதேச மன்னிப்பு சபை நேற்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023, ஒக்டோபர் 7ஆம் திகதியன்று, தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்படும் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலின் போது, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.
ஆயுதங்களை வழங்கும் நாடுகள்
காசாவில் பாலஸ்தீனியர்களை அழிக்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன், இனப்படுகொலை செயல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை கூறியுள்ளது.
இந்தநிலையில், இந்த இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்று மன்னிப்புசபை கோரியுள்ளது.
அதேநேரத்தில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் இனப்படுகொலையைத் தடுப்பதற்கான தங்கள் கடமையை மீறுகின்றன என்றும் மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் மீது செல்வாக்கு உள்ள அனைத்து நாடுகளும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற முக்கிய ஆயுத விநியோக நாடுகள், இங்கிலாந்து மற்றும் ஏனைய நாடுகள், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்களை உடனடி முடிவுக்கு கொண்டு செயல்பட வேண்டும் என்றும் மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் குறிப்பாக வடக்கு காசாவில் முற்றுகையிடப்பட்ட மக்கள் பட்டினி, இடப்பெயர்வு, இடைவிடாத குண்டுவீச்சு மற்றும் உயிர் காக்கும் மனிதாபிமான உதவிகள் தடுக்கப்படுகின்ற செயல்கள் என்பவற்றை எதிர்கொண்டுள்ளனர் என்றும் சர்வதேச மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |