அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும் பயங்கரவாதமா..! புதிய சட்டமூலம் குறித்து கேள்வி
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் உண்மையான நோக்கம் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதல்ல, மாறாக மக்களின் அரசியல் செயற்பாடுகளை முடக்கி அரச அதிகாரத்தை வலுப்படுத்துவதாகும் என்று முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது, "கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுத மோதல்கள்
இதன் பெயர் அரசைப் பாதுகாப்பதாகக் கூறப்பட்டாலும், மக்களின் அரசியல் செயற்பாடுகளிலிருந்து அரசைப் பாதுகாத்துக்கொள்வதும், மக்கள் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தி அரச அதிகாரத்தை அதிகரிப்பதுமே இதன் உண்மையான நோக்கமாகும்.

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதுபோல் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் மக்களின் அடிப்படை அரசியல் செயற்பாடுகளுக்கான வெளியைக் சுருக்கும் ஆபத்தான நோக்கமே மறைந்துள்ளது.
முந்தைய சட்டங்களில் பயங்கரவாதம் என்பது ஆயுத மோதல்கள் மற்றும் கொலைச் செயற்பாடுகளுடன் மட்டுமே தொடர்புபடுத்தப்பட்டிருந்தது.
ஆனால், புதிய சட்டமூலத்தில் அரசியல் அல்லது கருத்தியல் நோக்கத்துடன் அரசிடமோ அல்லது சர்வதேச அமைப்பிடமோ எதையாவது செய்யுமாறோ அல்லது செய்ய வேண்டாமெனவோ அழுத்தம் கொடுப்பதும் கூட பயங்கரவாதமாகக் கருதப்படக்கூடிய வகையில் வரைவிலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், தொழிலாளர்கள் தமது ஊதியத்தை அதிகரிக்குமாறு கோருவதோ அல்லது இந்தியா போன்ற வெளிநாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்த வேண்டாமெனக் கோருவதோ கூட எதிர்காலத்தில் பயங்கரவாதச் செயற்பாடுகளாக முத்திரைக் குத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சட்ட ஏற்பாடுகள்
இந்தச் சட்டமூலத்தின் பிரதான இலக்கு பயங்கரவாதிகள் அல்லர். மாறாக, தொழிற்சங்கத் தலைவர்கள், விவசாயத் தலைவர்கள், மாணவர் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுமே இதன் நேரடி இலக்குகளாக மாற்றப்படும் அபாயம் உள்ளது.

தற்போதைய சட்ட ஏற்பாடுகளின்படி தனிநபர்களைத் தடுத்து வைக்கும் அதிகாரம் நீதிமன்றங்களிடமே காணப்படுகின்றது.
ஆனால், இந்தப் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிப்பதன் மூலம், எத்தகைய நீதிமன்ற உத்தரவுமின்றி ஒருவரை ஒரு வருடம் வரை தடுத்து வைக்கும் அதீத அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்துக்கு வழங்கப்படவுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.