திட்டமிடலில் தோற்கிறதா வடமாகாணம்: இடையில் நிறுத்தப்பட்ட கட்டுமானப்பணிகள்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் நெல் களஞ்சியம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் இடைநடுவில் கை விடப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் பல கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு இடைநடுவில் அவை தொடராது நிறுத்தப்பட்டுள்ளது.
அபிவிருத்தி திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தும் போது அவை இடைநடுவில் கைவிடப்பட்டும் நிலை தோன்றினால் தோல்வியடைந்த திட்டமிடலாகவே அது நோக்கப்பட வேண்டும்.
கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு அண்மையில் உள்ள பாலமொன்றும் கட்டுமானப்பணிகள் கைவிடப்பட்ட நிலையில் மக்கள் இடர்களை எதிர்கொள்வதும் நோக்கத்தக்கது.
கைவிடப்பட்ட நெல் களஞ்சிய கட்டுமானப்பணிகள்
முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த நெல் களஞ்சியம் ஒன்று அதன் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு வேலைகள் கைவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
தொழிலாளர்களின் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தங்குமிடங்கள் அகற்றப்பட்டுள்ளது. காவலாளி என சொல்லும்படி ஒருவரை அந்த கட்டிடத் தொகுதியில் அவதானிக்க முடிகின்றது.
அப்பகுதி மக்களிடையே இது தொடர்பில் கேட்ட போது நெல் களஞ்சியசாலை ஒன்றுக்கான கட்டுமானம் என அவர்களும் உறுதிசெய்திருந்தனர். வேலைகள் இடைநிறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு ஆம் எனவும் ஆனாலும் விரைவாக கட்டுமானப்பணிகள் மீளவும் தொடங்கவுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
கைவிடப்பட்ட பல கட்டுமானப்பணிகள் தொடர்பாக மக்களிடையே அவை மீளவும் தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டு அதனோடு காத்திருக்கும் படலம் தொடர்வதனை அவதானிக்க முடிகின்றமையும் நோக்கத்தக்கது.
உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் கட்டடத்திணைக்களத்தின் ஆலோசனை பெறப்பட்டு விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தோடு வடமாகாண விவசாய திணைக்களம்,வடமாகாண கட்டட திணைக்களம் என பிறவனங்கள் தொடர்புபடும் இந்த முயற்சியினை 16.02.2021 ஆம் நாளில் ஆரம்பித்து 23.11.2021 ஆம் நாளில் முடிவுறுத்துவதற்கு திட்டமிட்டதாக விபரக்குறிப்பு அறிவிப்பில் விவசாய அமைச்சினால் குறிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட நிதிக்கு நடந்தது என்ன?
78.63 மில்லியன் இலங்கை ரூபாவினை மொத்தச்செலவாக கொண்டுள்ள இந்த திட்டம் திட்டமிட்ட காலப் பகுதிக்குள் முடித்திருக்கப்படின் இன்று நெல் தானியங்களை சேமிக்கக்கூடியதாக வேலைகள் முடிந்திருக்கும் என அப்பகுதி வாழ் மக்கள் சிலர் குறிப்பிட்டுகின்றார்.
வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள போதும் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது.அப்படியானால் ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுவதாக வணிகக்கல்வி மாணவர்களிடைய அபிவிருத்தி திட்டங்களை இடைநடுவில் கைவிடுவதால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து கலந்துரையாடிய வேளை அவர்களால் இப்படி கேள்வி எழுப்பப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
செயற்பாட்டுக் குறிப்புக்களை மக்களுக்கு காட்சிப்படுத்தும் பொது நோக்குப் போலவே திட்டமிட்டபடி முடித்துக்கொள்ள முடியாத வேலைத்திட்டங்கள் தொடர்பாக வேலைகள் நிறுத்தப்படுவது தொடர்பாகவும் மக்களுக்கு தெரிவிப்பதற்கான கடப்பாட்டினை உரிய நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டும்.
அது தான் பொருத்தப்பாடான வெளிப்படைத் தன்மையாக அமையும். ஆனாலும் இங்கு ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. வேலைகள் முற்றுப் பெறவில்லை.
அப்படியானால் ஏன் வேலைகள் நிறுத்தப்பட்டன என்ற கேள்விக்கு பதில் உரைக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பு காட்சிப்படுத்தலை திட்ட குறிப்பு காட்சிப்படுத்தலுக்கு அருகில் பேண வேண்டும் என்ற நிர்வாகவியல் பண்பினை அவதானிக்க முடியவில்லை என கருத்துரைத்து சமூகவிடய ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
அதுபோல் இதுவும் என கருத முற்படும் சூழல்
பரந்தன் புதுக்குடியிருப்பு (பரந்தன் முல்லைத்தீவு வீதி A35 ஆகும்.இந்த வீதியின் இடையில் உள்ள ஒரு நகரம் புதுக்குடியிருப்பு.) வீதியில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு அருகில் பரந்தன் நோக்கிய பக்கத்தில் கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பெரிய பாலம் இருப்பதனை இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
A35 வீதியின் அபிவிருத்தியின் போது அமைக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த பாலம் இன்று வரை பணிகள் முற்றுப் பெறவில்லை.இந்தப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் மீளவும் எப்போது பணிகள் ஆரம்பிக்கப்படும் என்ற எந்த குறிப்புக்களையும் பாலத்திற்கு அண்மையில் காட்சிப்படுத்தவில்லை.
கண்டாவளை பிரதேச செயலகத்தின் நிர்வாக ஆளுகைக்குள் இந்தப் பாலம் அமைவதால் பிரதேச செயலகத்தினை தொடர்பு கொண்டு இது இடைநிறுத்தப்பட்டது தொடர்பில் வினவிய போது உரிய பதிலோ அன்றி உரிய முறையிலோ அணுகப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு அண்மையில் அமைக்கப்பட்டு வந்த இந்த கட்டுமானம் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.இதுவும் அதுபோல் நீண்டு தொடருமோ என்ற எண்ணப்பாட்டினை வெளிப்படுத்த தூண்டுவதாக அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைவதனையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
16.02.2021 ஆம் நாளில் ஆரம்பித்து 23.11.2021 ஆம் நாளில் முடிவுறுத்துவதற்கு திட்டமிட்டதாக இருப்பின் ஒப்பந்தப்படி திட்டம் முடிக்க வேண்டிய காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அது மீளவும் ஆரம்பிக்கப்படாதது கவலையளிக்கும் செயற்பாடாகும் என நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் அக்கறையுடை பலரது கருத்தாக அமைவதனையும் மேற்கொண்ட கருத்தாடல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது என்பதும் நோக்கத்தக்கது.
முடிக்கப்படாத பேருந்து தரிப்பிடமும் அருகில்
பேருந்துக்காக பயனிகள் காத்திருக்கும் பேரூந்துத் தரிப்பிடம் ஒன்றின் கட்டுமான முயற்சிகளும் இடைநிறுத்தப்பட்டு இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
பொதுநல விடயங்களில் மக்களிடையே உள்ள அக்கறையின்மை தோல்விகளுக்கு காரணமாகலாம் என சமூக ஆர்வலர் ஒருவர் இது தொடர்பில் குறிப்பிட்டுகின்றார்.
தன்னார்வமாக தொடங்கப்பட்ட முயற்சிகள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்திலெடுத்து திட்டமிடல்களை செய்யும் போது பணிகளை முடிவுறுத்தி மக்களுக்கு பயன்படுத்த வழங்கிவைக்க முடியும்.
மக்களுக்காக தொடங்கப்பட்ட பணிகள் உரிய காலத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படாது போகும் போது அவற்றுக்கான ஆரம்ப முதலீடுகள் வீணாக்கப்படுவதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |