எரிபொருள் விநியோகத்தில் ஒழுங்கீனம்: பொதுமக்கள் புகார் (Photos)
நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று நாட்டில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக வரிசைகளில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், சரிவர எரிபொருள் விநியோகம் நடைபெறாததால் மக்கள் மத்தியில் விசனம் ஏற்பட்டிருந்ததோடு மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி
மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று களுவாஞ்சிகுடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வந்துள்ளது.
மக்கள் அரசாங்க அறிவித்தலுக்கிணங்க, வாகனத்தின் இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் நிரப்புவதற்காக மிக நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
எனினும், நண்பகலுக்கு பின்னர் பெட்ரோல் முடிவடைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் அறிவித்துள்ளனர். இது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதோடு மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
எரிபொருள் விநியோகம்
இது தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது,
"முச்சக்கரவண்டிகளுக்கு 2000 ரூபாவிற்கும், மோட்டார் சைக்கிளுக்கு 1500 ரூபாவிற்கும், காருக்கு 7000 ரூபாவிற்குமாக, 774 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் 6, 7, 8, 9 ஆகிய இறுதி இலக்க வாகனங்களுக்கு நேற்று எரிபொருள் வழங்க தீர்மானித்திருந்தாலும் அரசாங்க அறிவித்தலை தாண்டி, ஏனையோரும் கொள்வனவு செய்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில் உரிய அனுமதி பெற்று கலன்களில் டீசல் கொள்வனவு பெறுவதற்காக காத்திருந்த விவசாயிகளுக்கு டீசல் வழங்கல் தாமதமாக்கப்பட்டுள்ளன.
பின்னர் விவசாயிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு உரிமையாளரிடமும் கலந்துரையாடியதற்கு இணங்க, அனுமதி பெற்றவர்களுக்கு 20000 ரூபாவிற்கும், ஏனைய விவசாயிகளுக்கு 10000 ரூபாவிற்கும் டீசல் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
குடும்ப விநியோக அட்டையின் நடைமுறை
மேலும், அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள எரிவாயு கொள்கலன்களுக்கான 'குடும்ப விநியோக அட்டை' வழங்கப்பட்டு வருகின்றன.
இதுபோல், எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இக்குறித்த அட்டையில் பதிவீடு செய்து பின்னர் எரிபொருள் வழங்கினால் எந்தவித சிக்கலுமின்றி அனைவருக்கும் சீராக எரிபொருள் வழங்க முடியும்.
ஆனால் இந்த நடைமுறை நேற்று கடைப்பிடிக்கப்படவில்லை. மேலும், இதற்கு பொதுமக்களினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
எனவே, அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள குடும்ப அட்டையின் பிரகாரம், அதில் பதிவீடு செய்த பின்னர் எரிபொருளை வழங்கினால் எதுவித தடைகளுமின்றி அனைவருக்கும் சீராக எரிபொருள் வழங்கப்படும். எனவே பொதுமக்களும், பொலிஸாரும், இதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
சித்தங்கேணி
சித்தங்கேணி - சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் செய்யும்போது ஒழுங்கீனம் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் விநியோகத்தில் ஒழுங்கீனம்
வாகன இறுதி இலக்க அடிப்படையில் நேற்று மோட்டார் சைக்கிள்களுக்கே பெட்ரோல் விநியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால் வேறு இலக்கம் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கும் பெட்ரோல் நிரப்பப்பட்டது. இதனால் அங்கு ஒழுங்கீனம் ஏற்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அடுத்த நாட்களுக்கு உரிய இலக்கங்களை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு பெட்ரோல் வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எரிபொருள் அட்டையினை கண்காணிக்கும் பணியினை மேற்கொள்வதற்கு அந்த இடத்திற்கு வந்துள்ளனர்.
ஆனால் அவர்களை அந்த பணியில் ஈடுபட அனுமதிக்காமல் கூட்டுறவு சங்க ஊழியர்களே குறித்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதேச செயலக ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
செய்தி: கஜிந்தன்
இரண்டு வாரங்களில் சர்வக்கட்சி அரசாங்கம்:ஜனாதிபதி தீர்மானம் |