நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் (Photos)
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் வாகன இலக்கங்களின் அடிப்படையில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் ஆங்காங்கே சில இடங்களில் சீராக இடம்பெற்றதுடன், சில இடங்களில் மக்கள் எரிபொருள் கோரி போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.
மன்னார்
மன்னாரில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிபொருள் அட்டை நடைமுறையின் படி எரிபொருள் இதுவரை பெற்றிராத கிராமங்களுக்கு இன்றைய தினம் (22) முன்னுரிமை அடிப்படையில் மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்களுடன் இணைந்து எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மட்டும் கடமையில்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் மாத்திரம் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் கடற்படை மற்றும் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ள கியூ.ஆர் கோட் நடைமுறை வேண்டாம் எனவும் தற்போது மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் எரிபொருள் அட்டை மூலமான எரிபொருள் விநியோகமே எரிபொருள் பதுக்கலை தடுக்க சிறந்தது.
கியூ.ஆர் கோட் மூலம் விநியோகித்தால் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மக்கள் தொகை குறைந்த மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்ள வழி ஏற்படும் எனவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கினால் மீண்டும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டி வரும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் அனேகமானவர்கள் ஸ்மார்ட் போன் இல்லாத நிலையில் இணையத்தினூடாக பதிவு செய்ய சிரமப்படுவதாகவும் எனவே கிராம ரீதியாக எரிபொருள் அட்டையின்படி எரிபொருளை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம்
வடமராட்சி - மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, இலக்க தகடு இறுதி இலக்கங்களான 6,7,8,9. க்கு இன்று(22) காலை 10:30 மணியிலிருந்து பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பல நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், மற்றும் கார்கள் என்பன மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் நிரப்பி சென்றுள்ளன.
நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைகள்
பெட்ரோலானது மோட்டார் சைக்கிளுக்கு ரூபா 1500/-க்கும், முச்சக்கர வண்டிகளுக்கு 2000/-க்கும், கார்களுக்கு ரூபா 7000/- க்கும் என்ற விலைகளின் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் பொலிஸாரின் கண்காணிப்பில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டில் இன்றைய பெட்ரோல் விநியோகமானது மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: எரிமலை
கிளிநொச்சி
கிளிநொச்சி- பரந்தன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மக்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன இலக்கங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் இன்று எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லை.
இந்நிலையில் காலையில் நீண்ட வரிசைகளில் காத்திருந்த மக்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி: யது
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் (Photos) |
யாழ்ப்பாணம்
யாழில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ், எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக இன்று சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.