நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் (Photos)
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் எரிபொருள் விநியோகமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் இரண்டு பிரதேச செயலகங்களில் உள்ள மூன்று லங்கா எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலை நேற்று(21) மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் பிரதேச செயலகத்தினர் கிராம அலுவலகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
கிராமங்கள் தோறும் கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அட்டையை பெற்றவர்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குடும்பம் ஒன்றிற்கு ஒரு பெட்ரோல் வாகனம், ஒரு டீசல் வாகனம் என்ற வீதம் எரிபொருள் விநியோக அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது வாகனங்கள் குடும்ப அட்டையில் உள்ள உரிமையாளரின் பெயரினை கொண்டிருத்தல் வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கிராமங்கள் தோறும் கிராம சேவையாளர்களால் பதிவிற்கு உட்படுத்தப்பட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாவட்ட செயலகத்தினால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பெட்ரோல், டீசல் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தாலும் ஏனைய 10 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கடந்த ஒரு மாத காலமாக எரிபொருள் கிடைக்காத நிலை காணப்பட்டுள்ளது.
இன்னிலையில் அரசாங்கம் மக்களுக்கான எரிபொருள் வழங்கல் நடவடிக்கையின் நிர்வாக கட்டமைப்பினை சீர் செய்து இலக்கத்தின் அடிப்படையில் வழங்கி வருகின்றது.
கிராம சேவகர்களால் அறிவிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அந்தந்த திகதிகளில் குறிக்கப்பட்ட நேரங்களில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல்களை பெறாதவர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று நேரத்தினை வீணடிக்காமல் கிராம அலுவலரால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டை, டோக்கன் ஆகியவற்றுடன் வருகை தந்து பெட்ரோல் பெற்றுக் கொள்ளலாம் என பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்னி
விவசாயிகள் நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் அறுவடை இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் விநியோக நடவடிக்கை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு நேற்று(21) வன்னி மாவட்ட விவசாயிகள் தமது நெல்
அறுவடை இயந்திரங்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதன் மூலம் மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் விவசாயத்தை ஜீவனோபாயமாக கொண்ட ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் இதன் மூலம் பெரும் நன்மை அடைந்துள்ளனர்.
உரத் தட்டுப்பாடான நிலையிலும் சுமார் நாற்பதினாயிரம் ஏக்கர் நெற் செய்கை இம்முறை வன்னி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றை அறுவடை செய்வதற்கான இயந்திரங்களுக்கு எரிபொருள் இன்றி விவசாயிகள் பெரும் சவாலை முகம் கொடுத்து வந்துள்ளனர்.
நெற்பயிர்ச்செய்கை பிரச்சினை தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து லங்கா ஐ.ஓ.சி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளருக்கு கோரிக்கை அடங்கிய அவசர கடிதம் ஒன்றின் அனுப்பி எரிபொருளை துரிமாக பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.