இந்தியா வழங்கிய கடனில் இரும்பு கொள்வனவு செய்யப்படவில்லை:நிதியமைச்சர்
அத்தியவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா வழங்கிய கடன் நிதியில் இருந்து 750 மில்லியன் டொலர் நிதியை இரும்பை இறக்குமதி செய்ய செலவிட்டுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரசாரம் உருவாக்கப்பட்ட புனைக்கதை என நிதியமைச்சர் அலி சப்றி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக நிதியமைச்சு ஏற்கனவே விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 27(2) இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் நெருக்கடியான நிலைமை உருவாகியுள்ள சந்தர்ப்பத்தில் ஒருவர் மீது, ஒருவர் குற்றங்களை சுமத்தாது கொள்கை ஒன்றுக்கு அமைய செயற்பட வேண்டும். உலகில் எரிபொருளின் விலை 138 வீதமாக அதிகரித்துள்ளது.
நாட்டில் வரி செலுத்துவோர் பதிவு செய்யப்படுவது 10 லட்சத்திலும் பெறுமதி சேர் வரி செலுத்துவோர் 20 ஆயிரமாகவும் குறைந்துள்ளனர். வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளமை மிகப் பெரிய பிரச்சினை.
கடனுக்காக அதிகமான வட்டியை செலுத்தும் நாடு இலங்கை. கடன்களுக்கான வட்டி 50 வீதம். அரசாங்கம் வரி மறுசீரமைப்பு பொதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் போது அனைத்து மட்டங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி என்பது இலங்கையில் மாத்திரம் காணப்படவில்லை. பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது.
இது கோவிட் தொற்றுடன் அதிகரித்த நிலைமை. அதேவேளை 65 ஆயிரம் மெற்றி தொன் யூரியாவை இறக்குமதி செய்வது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம் எனவும் நிதியமைச்சர் அலி சப்றி கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி: இந்தியா வழங்கிய கடனில் உணவுக்கு பதிலாக இரும்பை கொள்வனவு செய்யும் அரசாங்கம்