இரணைமடு சிறுபோக செய்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானம்
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக பயிர் செய்கைக்காக வழங்கப்படும் நீர் உரிமத்தை விற்கவோ, கைமாறவோ முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சிறுபோகச் செய்கைகளின் போது கடந்த ஆண்டுகளில் பெருமளவு நீர்ப்பங்கு உரிபங்கள் பலிலட்சம் ரூபாவிற்கு விற்கப்படுதல் கையாடல் செய்தல் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு விசாரணைகள் மூலமும் உறுதியாகியுள்ளன.
இதனையடுத்து 2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக பயிர் செய்கைக்காக வழங்கப்படும் நீர் உரிமம் விற்கப்படவும் கைமாறவும் முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறுபோக பயிர் செய்கை
இதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்கையை பங்கிட்டு அடிப்படையில் முன்னெடுப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதாவது இரணைமடுக் குளத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர் செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை எடுக்கும் பொருட்டு கடந்த மூன்றாம் திகதி மற்றும் கடந்த திங்கட் கிழமை ஆகிய நாட்களில் மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரன் (பதில்) தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் சுழற்சி முறையில் செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
இதனை அடுத்து நேற்று சுழற்சி முறையினால் தாங்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட சில விவசாயிகள் கவணயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இது தொடர்பில் ஆராயும் வகையில் இன்று(10-04-2024) விசேட கலந்துரையாடல் ஒன்று முற்பகல் 9:30 முதல் இரண்டு மணி வரை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரச அதிபர் முரளிதரன் தலைமையில் நீர்ப்பாசன, திணைக்கள அதிகாரிகள் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற பங்கு உரிமைகள் கடந்த காலங்களிலே அதிக விலைகளுக்கு வியாபாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது பங்கு வியாபாரமே அதிகரித்தளவில் காணப்பட்டிருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவை கவனத்தில் கொள்ளப்பட்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஏக்கர் அளவுகளுக்குள் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது வலது கரை பகுதியில் முழுமையாகவும், இடது கரை பகுதியில் பங்கிட்டு அடிப்படையிலும் பயிர் செய்கை மேற்கொள்வது என தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கடந்த ஆண்டுகளை போல் அல்லாது விவசாயிகளுக்கு பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்படும் நீர்ப் பங்கு உரிமையானது புதிதாக மேற்கொள்ளப்பட்ட நெற்காணி பதிவேட்டின் அடிப்படையில் வழங்கப்படுவது என்றும் இவ்வாறான பங்குரிமைகளை கைமாறுவதற்கோ அல்லது விற்கவும் முடியாது என்றும் அவ்வாறான கைமாற்றங்கள் விற்பனை செய்யப்படுதல் தொடர்பாக உரிமைகளை ரத்து செய்வதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நீர்ப்பங்கு உரிமைகள் அந்தந்த பிரதேசங்களிலேயே செய்கை பண்ண பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |