மீண்டும் அதிரகரித்துள்ள ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம்..! ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் அதிரடி உத்தரவு
ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவு காரணமாக மத்திய கிழக்கில் மீண்டும் போர் சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
மொஜ்தபா கமேனியின் உத்தரவு
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், ஈரானின் உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முக்கிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
அமெரிக்கா தரப்பில், “ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாட்டுக்கு மாற்ற ஒப்புக்கொண்டால் மட்டுமே பதற்றம் குறையும்” என்ற நிபந்தனை வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எந்த நாட்டிற்கும் அனுப்பக்கூடாது என்று மொஜ்தபா கமேனி நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அமெரிக்கா மட்டுமின்றி, பேச்சுவார்த்தையில் நடுவராக செயல்பட்டு வந்த பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் புதிய நிலைப்பாடு
இதற்கிடையில், இஸ்ரேல் தரப்பும் ஈரானின் அணு திட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அமைதி ஒப்பந்தம் வேண்டுமெனில் ஈரான் தனது உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமையாக வெளியேற்ற வேண்டும்” என்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், “ஒரு கிராம் யுரேனியமும் வெளிநாட்டுக்கு அனுப்பப்படாது” என்ற ஈரானின் புதிய நிலைப்பாடு, அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணிக்கு நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் தாக்கம் உலக சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்ததையடுத்து, கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு 100 டொலரை தாண்டியுள்ளது.
உலகளாவிய பொருளாதாரம்
உலகளாவிய பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் கூறுகையில், பாகிஸ்தான் நடத்திய பல சுற்று அமைதி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவின் சமீபத்திய திட்டத்தை ஈரான் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மொஜ்தபா கமேனியின் இந்த உத்தரவு வெளியானது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தரப்பில், ஈரானை கடுமையான ஒப்பந்தத்திற்கு உட்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இல்லையெனில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வாய்ப்பும் இருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.