கபில சந்திரசேனவின் கைபேசி தரவுகளை பெறுவதில் சிக்கல்! சிஐடியினர் நீதிமன்றில் வெளியிட்ட தகவல்
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் கைபேசி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தமக்கு திருப்தியில்லை என்றும், இது குறித்து பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்கப்படும் என்றும் கொழும்பு,கோட்டை நீதிவான் பசன் அமரசேன கொழும்பு குற்றப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிவான் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்திடம் மீண்டும் கோரிக்கை
உயிரிழந்தவரின் கைபேசி தரவுகளை பெறுவதற்காக, நீதி அமைச்சு வழியாக MNLA யினால் ஆப்பிள் நிறுவனத்திற்கு நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டிருந்ததாகவும், ஆனால் அத்தரவுகள் 90 நாட்களுக்கு மட்டுமே வைக்கப்படும் என்று அந்நிறுவனம் பதிலளித்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி, 90 நாள் காலக்கெடு நவம்பர் மாதம் 29 அன்று முடிவடையும் என்றும் நீதிவான் அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் கைபேசியில் உள்ள தரவுகளும் இழக்கப்படுமா என்று கொழும்பு குற்றப்பிரிவிடம் வினவியுள்ளார்.
இந்த கோரிக்கைக்கு பதிலளிக்குமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் மீண்டும் கோரியுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.