பொதுமக்கள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்:சுரேஷ் பிரேமச்சந்திரன்
பொதுமக்கள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர யுத்த குற்றங்களில் ஈடுபட்டாரா, இல்லையா என்பதை அறிவதற்கு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலே உண்மைகள் வெளிவரும் என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை. போரின் போது நிகழக்கூடாத சில விடயங்கள் நடந்திருக்கலாம் என பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”யுத்தக் குற்றங்கள் இலங்கையில் நடக்கவில்லை என கூறுவது ஒரு அப்பட்டமான பொய். செம்மணிப் புதைகுழி விவகாரம் என்பதுவே ஒரு யுத்தக் குற்றம்.
யுத்த குற்றம்
அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதுவே ஒரு யுத்த குற்றம். அதுபோல வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்கள் பல நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
யுத்தத்தினுடைய இறுதி நாட்களில் பாதுகாப்பு வலயம் எனக் கூறிவிட்டு மக்களை அந்த பாதுகாப்பு இடத்திற்கு செல்லுங்கள் என கூறிவிட்டு அந்த பாதுகாப்பு இடங்கள் என கூறப்பட்ட பகுதிகளுக்குள் மோட்டார் குண்டு மூலம் தாக்கியும், வேறு பல்வேறு விதமான முறையிலும் தாக்கியும் அந்த மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பது சர்வதேச ரீதியாக எல்லோரும் ஏற்றுக் கொண்ட விடயம். அதுவே மிகவும் பாரதூரமான ஒரு யுத்த குற்றம்.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் முதலில் இராணுவத்தில் இருந்ததனால் அவர் யுத்த குற்றம் இடம்பெறவில்லை என்றுதான் கூறுவார். அவரைப் பொறுத்தவரை அவர் இராணுவத்தை பாதுகாக்க வேண்டும், முப்படையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே உள்ளார்.
அவர் ஏற்கனவே இராணுவத்தில் இருந்ததனால் அவருக்கும் இப்படியான தொடர்புகள் இருக்குமோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆகவே அது குறித்து அவரிடம் முழுமையான விசாரணை செய்தால்தான் தெரியும் அவரும் யுத்த குற்றம் செய்தாரா இல்லையா என்று.
யுத்தக்குற்றம் புரிந்தவர்களே அந்த விசாரணையை செய்யக்கூடாது. அப்படி அவர்களே அந்த விசாரணையை செய்தால் நிச்சயமாக மக்களுக்கு நீதி கிட்டாது. ஆகவே தான் எங்களுக்கு ஓர் சர்வதேச விசாரணை தேவை என நாங்கள் தொடர்ச்சியாக கூறுகின்றோம்.
சர்வதேச விசாரணை
உண்மையாகவே நீங்கள் யுத்த குற்றம் செய்யவில்லை என்றால் நீங்கள் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை கிடையாது. நீங்கள் ஒரு அரசாங்கம், உங்களுக்கு சட்டதிட்டங்கள் தெரியும், உங்களுக்கு பலம் இருக்கின்றது.
ஆகவே நீங்கள் ஒரு சர்வதேச விசாரணைகளுக்கு முகம் கொடுத்து யுத்த குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என நிரூபிக்க வேண்டியது தான் உங்களுடைய கடமை.
அதனை விடுத்து யுத்த குற்றம் எதுவும் நடைபெறவில்லை, சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொள்ள மாட்டோம், இங்கு யாருக்கும் தண்டனை கொடுக்கத் தேவையில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயமானது? சரியானது.
தற்போது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் ஏற்கனவே இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் இவ்வாறு தான் பேசுவார். அவர் மாத்திரமல்ல இலங்கையினுடைய வெளி விவகார அமைச்சராக இருக்கக்கூடியவர் இப்போது ஜெனிவா சென்று ஜெனிவாவிலும், உள்ளக விசாரணையை நாங்கள் செய்வோம் சர்வதேச விசாரணையை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற விஷயத்தை கூறியிருக்கின்றார்.
இவர்கள் மாத்திரமல்ல யுத்தத்திற்கு பிறகு வந்த சகல அரசாங்கங்களும் இனிமேல் வரப்போகின்ற அரசாங்கங்களும் முப்படைகளை பாதுகாக்க வேண்டும். முப்படை மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் சிங்கள மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் திரும்புவார்கள் என்று அச்சம் அவர்களுக்கு இருக்கின்றது.
]தமிழ் மக்கள்
அச்சம் மாத்திரமல்ல இப்படி விசாரணைகளை செய்வதற்கு அவர்களும் தயாராக இல்லை. அவர்களை பொறுத்தவரை தங்களுடைய இராணுவம் பயங்கரவாதத்தை அடியோடு இல்லாமல் செய்திருக்கின்றது ஆகவே அவர்கள் செய்தது சரி என்ற வகையில் தான் இன்று இருக்கக்கூடிய அரசாங்கமும் இருக்கின்றது.
அவர்களுடைய படைகள் யுத்த தர்மத்துக்கு மேலாகச் சென்று மிகவும் மோசமான முறையில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள எந்த அரசாங்கமும் தயாராக இல்லை. அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றார்கள்.
அதாவது நாங்கள் இப்போது எத்தனை பேரை கைது செய்திருக்கின்றோம், நாங்கள் நீதியான ஆட்கள் என காட்ட முயல்கின்றார்கள். கடந்தகாலங்களில் ஊழல்களில் ஈடுபட்டு இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக உள்ளவர்களை, அதாவது ரணில் விக்ரமசிங்கவையோ, அல்லது வேறு அமைச்சர்களையோ கைது செய்து சிறையில் அடைகின்றீர்கள், பிணையில் விடுகின்றீர்கள். அது வேறு.
உள்நாட்டு விசாரணையில் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் கிடையாது. ஏனெனில் நீங்கள் அதனை செய்ய மாட்டீர்கள் என மக்களுக்கு தெரியும். ஏற்கனவே பல விடயங்கள் தமிழ் மக்களுக்கு எதிராகத்தான் நடைபெற்று முடிந்திருக்கின்றன.
எனவே இராணுவத்தில் இருந்து வந்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் என்பவர் இதைத் தவிர வேறு எதையும் சொல்ல மாட்டார் என்பது தெரிந்த விடயம் ஆனால் இவர்களுடைய உள்ளக விசாரணைகளுக்கு ஊடாக தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




