பொலன்னறுவை விடுதி முகாமையாளர் கொலை: பொலிஸாருக்கு எதிரான தீர்ப்பு
2004ஆம் ஆண்டில் பொலன்னறுவையில் விடுதியொன்றின் முகாமையாளராக கடமையாற்றிய ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 பொலிஸாருக்கு பொன்னறுவை உயர் நீதிமன்ற நீதிபதி 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த தீர்ப்பு நேற்றையதினம்(13.09.2025) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு பொன்னறுவை மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் நால்வர், குறித்த விடுதியில் சட்டவிரோத மதுபானத்தை தேடி சென்று சோதனை நடத்தினர்.
அதன்போது, விடுதி முகாமையாளருக்கும் பொலிஸாருக்கும் ஏற்பட்ட வாய்த் தகறாரையடுத்து முகாமையாளர் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியதில் அவர் உயிரிழந்தார்.
இடமாற்றம்
இதனையடுத்து, குறித்த 4 பொலிஸாரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதன் பின்னர், நீதிமன்ற பிணையில் அவர்கள் வெளிவந்ததுடன் அவர்கள் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டனர்.
குறித்த வழக்கு விசாரணை பொன்னறுவை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், பொலிஸ் பரிசோதகர் வசந்த உடல்நிலை சரியில்லாததன் காரணமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஏனைய 3 பொலிஸாருக்கு 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் வேலை வழங்கி சேவையில் இணைந்து கொண்டதுடன் அவர்களில் ஒருவரான பொலிஸ் கான்ஸ்டபிள் ஜகத் பிரியந்த, மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கும் ஏனைய இருவரும் வேறு மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் இடமாற்றப்பட்டனர்.
கடூழிய சிறைத் தண்டனை
இவ்வாறான நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 3 பொலிஸாரும் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, 3 பேரும் குற்றவாளிகள் என சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மூலம் கண்டறியப்பட்டதையடுத்து, நீதிபதி, அவர்களுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, 3 பேரையும் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்று பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




