போராட்டங்களால் பாதிக்கப்படும் சர்வதேச ஆதரவுகள்! அனுமதியற்ற போராட்டங்களுக்கு சட்ட நடவடிக்கை
நாட்டில் ஒரு நிலைத்தன்மை உருவாகிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் போராட்டங்களை நடத்தி மக்களுக்கு இடையூறு விளைவித்தால் அது தொடர்பில் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சினால் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்களுக்கு அனுமதி
அவர் மேலும் கூறுகையில், போராட்டங்கள் நடத்துவது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை. போராட்டங்களை நடத்த முடியும். ஆனால் சட்டத்திற்கு அமைவாக அந்த போராட்டங்களுக்கான அனுமதியை பெற வேண்டும்.
தங்களது அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை அனைவரும் விரும்புவதில்லை. ஆகவே அவை அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தே பொலிஸார் அனுமதி வழங்குவார்கள். அவ்வாறு இல்லாமல் திடீரென உருவாகும் போராட்ட பேரணிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளது.
உயர் பாதுகாப்பு வலயம்
மேலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்பது இன்று நேற்று அறிமுகப்படுத்தப்பட்டவை அல்ல. சில சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதற்காக காலங்காலமாக பின்பற்றும் விடயங்கள்.
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதிக்கும் உலக நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்புகள் இடம்பெறும். இவ்வாறு உலக நாடுகளின் அதிகாரிகள் கொழும்பிற்கு வரும் சந்தர்ப்பத்தில் குறித்த பிரதேசங்களில் கலவரமான ஒரு சூழ்நிலை காணப்பட்டால் நாட்டின் அபிவிருத்திக்காக சர்வதேசத்தின் ஆதரவை பெறுவதற்கு அது மிகப்பெரிய தடையாக மாறிவிடும்.
எவ்வாறாயினும் மிகப்பெரிய கொழும்பு பிரதேசத்தில் மிக குறைந்த பகுதிகளே உயர் பாதுகாப்பு வலயங்களாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.” என அவர் தெரிவித்துள்ளார்.