உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராயும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திங்கட்கிழமை (26) கூடவுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான மையம் (CPA) உட்பட பல தரப்புகள் ஏற்கனவே இது தொடர்பில், அதன் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளன.
உயர் பாதுகாப்பு வலயங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை (23) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார்.
அதன்படி, குறித்த பகுதிகளில் மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர் அல்லது சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, எந்தவொரு நபரும் வீதி, மைதானம், கரை அல்லது திறந்த வெளியில் பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்தவோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.