காஞ்சிபானி இம்ரானை கண்டறிய தமிழக காவல்துறையின் கியூ பிரிவு தீவிரமான சோதனை
தேடப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் காஞ்சிபானி இம்ரான் இலங்கை அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடி, தமிழகத்தில் பதுங்கி இருக்கிறாரா என்பதை கண்டறிய தமிழக காவல்துறையின் கியூ பிரிவு தீவிரமான சோதனைகளில் ஈடுபட்டுள்ளது.
குற்றவாளி, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்ரானை கைது செய்ய இலங்கை அரசாங்கம் இந்தியாவின் உதவியையும் நாடியுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களிடம் விசாரணை
இம்ரான் ராமேசுவரத்துக்குள் பதுங்கி இருந்தாரா என்பதை அறிய உள்ளூர் மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக கியூ பிரிவு அதிகாரிகள் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
இதேவேளை கஞ்சிபானி இம்ரான் என்றழைக்கப்படும் நஜீம் மொஹமட் இம்ரான் பிணையில் வெளியில் வருவதற்காக சரீரப்பிணைக்கு கையெழுத்திட்ட உத்தரவாததாரர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இம்ரானின் தாய், சகோதரர் மற்றும் மற்றொருவரே சரீரப்பிணைக்கு கையெழுத்திட்டுள்ளார்கள். முன்னதாக கஞ்சிபானி இம்ரான், இந்தியாவுக்கு தப்பிச் சென்று, அங்கிருந்து பாகிஸ்தானுக்குள் நுழையத் தயாராகி வருகிறார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கஞ்சிப்பானி இம்ரான் இலங்கையில் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார், அவர் கடந்த டிசம்பர் 20ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் 5 மில்லியன் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
எனினும் கஞ்சிபானி இம்ரான் ஐந்து நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கடற்கரை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக இந்திய உளவுத்துறை தமிழக உளவுத்துறைக்கு அறிவித்தது.
இதேவேளை நீதிமன்ற உத்தரவின்படி, கஞ்சிபானி இம்ரான் ஒவ்வொரு மாதமும் கடைசி
ஞாயிற்றுக்கிழமை மாளிகாவத்தை பொலிஸில் முன்னிலையாக வேண்டும் என்ற உத்தரவையும்
நீதிமன்றம் பிறப்பித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.