அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நவநீதம் பிள்ளைக்கு அனைத்துலகத் தமிழர் பேரவை வாழ்த்து
2026ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நவநீதம் “நவி” பிள்ளைக்கு அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT) வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக அவர் ஆற்றிவரும் வாழ்நாள் பணிக்கு இவ்வுயரிய விருது சிறப்பான அங்கீகாரமாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த மக்கள்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தென்னாப்பிரிக்காவில் தமிழ் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை அவர்கள், நிறவெறி ஆட்சியின் அநீதிகளை எதிர்கொண்டு, சர்வதேச அளவில் தலைமைத்துவ நிலைக்கு உயர்ந்தமை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமையையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.

அவரது சாதனைகள், அவரது தமிழ் வேர்களின் வலிமையையும், புலம்பெயர்ந்தோரின் வழித்தோன்றல்கள் தாம் வாழும் நாடுகளுக்கும் மனிதகுலத்திற்கும் ஆற்றக்கூடிய மகத்தான பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன.
கல்வி, சம வாய்ப்புகள், சமூகப் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தின் ஊடாகப் புலம்பெயர்ந்த மக்களையும் சமூகங்களையும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த அங்கீகாரம் மேலும் வலியுறுத்துகிறது.
இளைஞர்கள், பெண்கள் மற்றும் நலிவுற்ற சமூகங்கள் தடைகளைக் கடந்து, தமது முழுத் திறனையும் வெளிப்படுத்துவதற்கு உறுதுணையாகச் செயல்பட அவரது வாழ்க்கைப் பயணம் எம்மை ஊக்குவிக்கிறது.
மனித கண்ணியத்தைப் பாதுகாக்கவும், பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கவும், நீதியும் அமைதியும் நிறைந்த உலகைக் கட்டியெழுப்பவும் அவரது துணிவும் அர்ப்பணிப்பும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.