ராஜபக்சவினர் இருக்கும் வரை சர்வதேச உதவிகள் கிடைக்காது: ரணிலின் இறுதி அரசியல் அத்தியாயம் - ராஜித சேனாரத்ன
ராஜபக்சவினரின் கீழ் தற்போதைய அரசாங்கத்தை பொறுப்பேற்பதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த முடிவு எந்தளவுக்கு சரியானது என்பதை நாட்டு மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர் என நம்புவதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தால், எங்கிருந்தும் உதவிகள் கிடைக்காது.
எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தூரநோக்கு சிந்ததனை காரணமாக அவர் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. ராஜபக்சவினர் இருக்கும் வரைக்கும் நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச உதவிகள் கிடைக்காது.
மத்திய கிழக்கு நாடுகள் ஒரு சொட்டு எரிபொருளையும் வழங்காது
ஐரோப்பா உட்பட வளர்ச்சியடைந்த நாடுகளிடம் இருந்து எமக்கு எப்போதும் உதவிகள் கிடைக்காது. ராஜபக்சவினர் பரப்பிய முஸ்லிம் எதிர்ப்பு காரணமாக நிவாரண உதவியாக மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து ஒரு சொட்டு எரிபொருள் கூட கிடைக்காது.
எனினும் எமது எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையின் கீழ் சரியான முறையில் சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின் மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் செலுத்தும் கடன் அடிப்படையில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியும்.
ஜனாநாயக ஆட்சி நிர்வாக வரைவை முன்வைப்பதன் மூலம் ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு உதவும். தற்போதைய அரசாங்கத்திற்கு உதவ எவரும் முன் வர மாட்டார்கள் என்பது தெளிவானது.
இறுதியில் ஒரு நபர் காரணமாக முழு நாடும் துன்பத்தை அனுபவித்து வருகிறது. இதனால், நாங்கள் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து வெளியேறுமாறு கூறுகின்றோம்.
ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டு, சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவோம்.
ரணிலையும் விரட்ட வேண்டும்:ரணிலின் இறுதி அரசியல் அத்தியாயம்
இன்னும் ஒரு வாரத்திற்குள் ரணில் விக்ரமசிங்கவையும் விரட்ட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கூறினர்.
இதுதான் தற்போது அரசாங்கத்திற்குள் இருக்கும் நிலைமை. ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க கூறுவதை ஜனாதிபதி கவனத்தில் கொள்வதில்லை என்பதே இதற்கு காரணம்.
இப்படியான துயரமான நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
முழு ஐக்கிய தேசியக் கட்சியையும் அழித்த ரணில், தற்போது நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து விட்டு, தனது அரசியலில் இறுதி அத்தியாயத்தில் இருந்து வருகிறார் எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
