அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதி குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால வீசா!
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடு கடத்தலை எதிர்நோக்கியும் நீதிமன்ற உத்தரவு காரணமாக அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கை தமிழர்களான பிரியா - நடேஸ் மற்றும் அவர்களது மூத்த மகள் கோபிகாவிற்கு அவுஸ்திரேலிய, குடிவரவு அமைச்சர் அலெஸ் ஹாவ்க் (Alex Hawke) தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, 12 மாத இடைக்கால பிரிட்ஜிங் வீசாவை (Bridging visa) வழங்கியுள்ளார்.
எனினும் அவர்களது இளைய மகள் தருணிக்காவிற்கு வீசாவை அவர் வழங்கவில்லை. இதன் காரணமாக அந்த குடும்பத்தினர் அனைவரும் பெர்த் நகரில் சமூகக் காவலில் உள்ளதாக SBS செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்தக் குடும்பம் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயெலா நகருக்குத் திரும்பக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தருணிகாவிற்கு வீசா வழங்கவில்லை என்று இந்தக் குடும்பத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தருணிகாவின் பெற்றோர்கள் பிரியா, நடேஸ் மற்றும் அவரது மூத்த சகோதரி கோபிகா ஆகியோருக்கு மூன்று மாத இடைக்கால வீசா வழங்குவதற்கு, அமைச்சர், பிராந்திய வலய நீதிமன்றில் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
பிரியா-நடேஸ் ஆகியோருக்கு ப்ரிட்ஜிங் விசாவை புதுப்பிக்க அமைச்சர் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கிய போதும், தற்போது அமைச்சரின் முடிவு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. இவர்கள் நான்கு பேருக்கும் வீசா வழங்குவதற்கு அமைச்சரிடம் அதிகாரம் இருக்கிறது.
ஆனால் மூவருக்கு வீசா வழங்கி விட்டு, சிறுமி தருணிகாவிற்கு மட்டும் வீசா வழங்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்று அவர்களது குடும்ப நண்பரும் நீண்ட நாள் ஆர்வலருமான ஏஞ்சல் பிரடெரிக்ஸ் (Angela Fredericks) கூறியுள்ளார் கோபிகா மற்றும் தருணிகா இருவருமே குயின்ஸ்லாந்தில் பிறந்தவர்கள்.
இருவருமே பிலோயெலா (Biolela) நகருக்கு செல்வதையே விருப்பமாகக் கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் பிரியா-நடேஸ் குடும்பம் தடுப்புமுகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டு பிலோயெலா திரும்ப வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.