இலங்கையின் புலனாய்வு வலையமைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிருப்தி
கஞ்சிப்பானி இம்ரான் என்ற மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் தமிழகத்தின் ராமேஸ்வரம் பிரதேசத்திற்கு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பதிலளிப்பார்
கஞ்சிப்பானி இம்ரான் கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்ட போதிலும் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் அது சம்பந்தமாக செயற்பட்டதா என செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த விடயம் சம்பந்தமாக தனக்கு தெரியாது எனவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இதற்கு பதிலளிப்பார் எனவும் கூறியுள்ளார்.
செய்தியாளர்- கஞ்சிப்பானி இம்ரான் கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி பிணையில் விடுதலையான போது அல்லது விடுதலையாகும் முன்னர் அவர் தலைமன்னார் ஊடாக இராமநாதபுரத்திற்கு செல்ல உள்ளதாக இந்திய புலனாய்வு தகவல்கள் மற்றும் தமிழக புலனாய்வுப்பிரிவினர் தகவல் வெளியிட்டனர்.
இது குறித்து இலங்கை புலனாய்வுப்பிரிவினர் கவனம் செலுத்தாத நிலையில், இந்திய புலனாய்வுப்பிரிவினரின் தகவல்களுக்கு அமைய கஞ்சிப்பானி இம்ரான் டிசம்பர் 25 ஆம் திகதி இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இது சம்பந்தமாக ஏன் இலங்கை புலனாய்வுப்பிரிவினர் நடவடிக்கை எடுக்கவில்லை?.
அமைச்சர்- இலங்கையில் இருந்து வெளியேறி கஞ்சிப்பானி இம்ரான் பற்றி அமைச்சரவையில் பேசப்படவில்லை. எமக்கு தெரியாது. புலனாய்வுப்பிரிவினர் இதனை அறியாமல் இருந்தனரா என்பதை புலனாய்வுப்பிரிவுகளிடமே கேட்க வேண்டும்.
இது குறித்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பதிலளிப்பார். எனக்கு அதுபற்றி தெரியாது. சாதாரணமாக எமது புலனாய்வுப்பிரிவு பின்தங்கி உள்ளதாக என்ற கேள்வியும் எழுகிறது.
இந்திய புலனாய்வுப்பிரிவினர் ஈஸ்டர் தாக்குதல் குறித்து தகவல் வழங்கும் போது எமது புலனாய்வுப்பிரிவு தொடர்பில் கேள்வி எழுந்தது. அவை படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகிறது எனவும் பந்துல குணவர்தன பதிலளித்துள்ளார்.



