நிரந்தர வீடுகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் மீள வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் ஊடாக நிரந்தர வீடுகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும், டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத் திட்டங்களின் வீடுகளும் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெற்ற வீட்டு திட்ட பயனாளிகள் தெரிவில் ஏற்கனவே பல்வேறு திட்டங்களின் ஊடாக நிரந்தர வீடுகளைப் பெற்று முழுமைப்படுத்தியவர்களுக்கும் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இடம்பெற்ற முறைகேடுகளால் அதற்கான கொடுப்பனவுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் உண்மையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளை கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள்
அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் அண்மையில் வழங்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வீட்டு திட்ட பயனாளிகள் தெரிவில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக 2010ஆம் ஆண்டு மீள் குடியேற்றத்தில் இருந்து இன்றுவரை வீட்டுத் திட்டங்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாத பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல்வேறு முறைப்பாடுகளையும் செய்துள்ள நிலையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி புளியம்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் 59க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை நிரந்தர வீட்டு திட்டங்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாது உறவினர் - நண்பர்கள் வீடுகளிலும், தற்காலிக வீடுகளிலும் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றன.
இவர்களுக்கான வீட்டுத்திட்டங்களை வழங்காது குறித்த பகுதியில் ஏற்கனவே நிரந்தர வீட்டு திட்டங்களை பெற்றுக் கொண்டு அதனை முழுமைப்படுத்தி அதில் குடியிருந்த குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு முறைகேடான விதத்திலே வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அகற்றப்பட்ட கூரைகள்
இவ்வாறான நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து இவற்றிலிருந்து தப்புவதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட நிரந்தர வீடுகளின் கூரைகளை அகற்றியும் உள்ளனர்.

அதாவது 2016ம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொண்ட தனிநபர் ஒருவருக்கு டித்வா திட்டத்தில் கண்டாவளை சமுர்த்தி வங்கியில் அவரது பேரனுடன் இணைந்து ஒரு கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருந்ததுடன், புதிய வீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது .
விசாரணைகளில் இருந்து தப்புவதற்காக 2026ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் திகதி இரவு 10:00 மணிக்கு பின்னர் , NHDA வீட்டுத் திட்டத்தின் கீழ் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்த அவரது வீடு உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ் வீட்டுத்திட்ட பயனாளியாக தெரிவு செய்யும் சுற்று நிரூபங்களுக்கு மாறாக தனிநபர் முதியவர்களுக்கும் முறையற்ற விதத்திலே குறித்த வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
