அரசியல் இலாபத்திற்காகவே 1983 இனக்கலவரம் உருவாக்கப்பட்டது! இளங்குமரன் எம்.பி பகிரங்கம்
1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரம் தானாக உருவான ஒன்றல்ல என்றும் இது அரசியல் இலாபத்திற்காகவும் இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்காகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தை இதற்கான ஆரம்பகட்ட நிகழ்வுகளில் ஒன்றாகக் கருத வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண நூலகத்தை மாத்திரமன்றி தமிழ் மக்களின் வாக்குரிமையையும் எரித்துச் சாம்பலாக்கியவர்கள் என அன்றைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களை அவர் விமர்சித்தார்.
நூலக எரிப்பு சம்பவம்
யாழ்ப்பாணத்தில் தமக்கு வாக்குகள் கிடைக்காது என்ற எண்ணத்தில் வாக்குச் சீட்டுகள் எரிக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
1981ஆம் ஆண்டு நூலக எரிப்பு சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு அன்றைய ஆட்சியாளர்கள் உரிய நீதியைப் பெற்றுக்கொடுத்திருந்தால் 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்டிருக்காது எனத் தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரஇ தாம் இந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்ப்பதாகவும் அந்தக் காலப்பகுதியில் தாம் அரசியலில் இருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த கே. இளங்குமரன் அன்றைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவளித்தவர்களே இன்றைய எதிர்க்கட்சியில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இனக்கலவரம்
1983ஆம் ஆண்டு இனக்கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும்இ பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியதற்கும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு ஆயுத இயக்கங்கள் தோன்றுவதற்கும் முன்னைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகளே காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.