துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு 11 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு!
2015ஆம் ஆண்டு கல்லடி பிரதேசத்தில் T56 தன்னியக்க துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நபர் வழக்கில் இருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(23.11.2026) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுதே மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 வருடங்களுக்கு பின் கிடைத்த தீர்ப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
2015ஆம் ஆண்டு மண்டூரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய நபர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த காசி சேனாதிராஜா என்பவர் கடந்த 2015 ஜீன் மாதமளவில் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அடையாள அணிவகுப்பு இடம்பெற்று உறுதிப்படுத்தப்படாத நிலையிலும், கல்லடி பிரதேசத்தில் T56 தன்னியக்க துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உடைமையில் வைத்திருந்தமை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து குறித்த நபர் 2016ஆம் ஆண்டு வரையில் பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டமா அதிபரின் அறிக்கையின் பிரகாரம் பிணை வழங்கப்பட்டு கல்முனை மேல் நீதிமன்றத்திற்கு குறித்த வழக்கு சுடுபடைக்கல கட்டளைச்சட்டத்தின் கீழும் வெடிப்பொருள் சட்டத்தின் கீழும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு, தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று(23.11.2026) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.ஜே.பிரபாகரனால் வழக்கிற்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் தொடர்புபட்ட காசி சேனாதிராஜா சார்பில் சட்டத்தரணி மகேஸ்வரன் பிரகாஷ் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
குறித்த தீர்ப்பின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நபரான முன்னாள் பிரதேசசபை உறுப்பினரான காசி சேனாதிராஜா வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.